சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மாற்றம்: புதிய ஆணையராக கரன் சின்கா பொறுப்பேற்பு

சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த எஸ். ஜார்ஜ் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
கரன் சின்கா - ஜார்ஜ்
கரன் சின்கா - ஜார்ஜ்

சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த எஸ். ஜார்ஜ் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பெருநகர புதிய காவல் ஆணையராக கரன் சின்கா பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது குறித்த விவரம்:
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. வேட்புமனு பரிசீலனை முடிந்துள்ள நிலையில், ஓரிரு நாள்களில் வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில், சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக இருந்த எஸ்.ஜார்ஜ், ஆளும்கட்சியான அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், தேர்தல் அமைதியாகவும் நியாயமாகவும் நடைபெற ஜார்ஜை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனால் ஆணையர் ஜார்ஜ் எந்நேரமும் மாற்றப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன்மார்டி சனிக்கிழமை ஒரு உத்தரவை வெளியிட்டார்.
அந்த உத்தரவில், சிபிசிஐடி இயக்குநராக இருக்கும் ஏ.டி.ஜி.பி. கரன் சின்கா சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்படுவதாகவும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக இருந்த எஸ்.ஜார்ஜ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவையடுத்து,கரன் சின்கா சனிக்கிழமை நண்பகல் 1 மணியளவில் ஆணையராக பொறுப்பை ஏற்க, சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்துக்கு வந்தார். அவரை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர்.
இதையடுத்து கரன் சின்கா ஆவணத்தில் கையெழுத்திட்டு, ஆணையர் பொறுப்பை ஏற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தேர்தலையொட்டி, ஆர்.கே.நகரில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டம், தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றத்தைத் தடுக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். போக்குவரத்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
அப்போது அவருடன் கூடுதல் ஆணையர்கள் அபய்குமார்சிங், பி.தாமரைக்கண்ணன், சங்கர், சேஷஷாயி, கணேசமூர்த்தி, துணை ஆணையர் விமலா,உதவி ஆணையர் சுஷில்குமார் ஆகியோர் இருந்தனர்.
புறநகர் காவல் ஆணையர்: சென்னையின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள கரன் சின்கா உத்தரகண்ட் மாநிலம் தெகரி பகுதியைச் சேர்ந்தவர். ஐ.பி.எஸ். படித்து முடித்து 1987ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணிக்கு சேர்ந்தார். தமிழக காவல்துறையில் பல்வேறு நிலைகளில், பல மாவட்டங்களில் கரன் சின்கா பணிபுரிந்துள்ளார்.
முக்கியமாக சென்னை புறநகர் காவல் ஆணையர், மத்திய மண்டல ஐ.ஜி.,கோவை காவல் ஆணையர், குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார். புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள கரன் சின்கா, சென்னை பெருநகர காவல்துறையின் 105ஆவது ஆணையர் ஆவார்.
காத்திருப்போர் பட்டியலில் ஜார்ஜ்: இதனிடையே எஸ். ஜார்ஜ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com