தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: வைகோ நேரில் சென்று ஆதரவு!

தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தொடர்ந்து 14-வது நாளாக தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ...
தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: வைகோ நேரில் சென்று ஆதரவு!

புதுதில்லி: தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தொடர்ந்து 14-வது நாளாக தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். 

வறட்சியில் வாடும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி தமிழகத்தை சேர்ந்த 'தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்' என்ற அமைப்பின் சார்பில் தமிழக விவசாயிகள் சுமார் 100 பேர் டெல்லியில் கடந்த 13-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வறட்சி நிவாரணம், வங்கிக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் சமூகநல அமைப்பினர் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தின் 14-ம் நாளான இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இதே ஜந்தர் மந்தர் பகுதியில் இலங்கைத் தமிழர்களுக்காக சுமார் 20 போராட்டங்களை நான் நடத்தி இருக்கிறேன். ஆனால் கழுத்தில் மண்டை ஓடுகளை கட்டிக்கொண்டு, கோவணம் கட்டிக்கொண்டு போராடுவது என்பதெல்லாம் எனக்குத் தெரிந்த வரையில் டெல்லி சரித்திரத்திலேயே கிடையாது.

தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரதிநிதிகளாகத்தான் இந்த 300 பேர் இங்கே இருக்கிறார்கள் இங்கே நான் ஒரு விவசாயியாகவே வந்திருக்கிறேன். இவர்களோடு சேர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளேன். நான் கட்சி பற்றி பேசவில்லை.

தமிழக அரசு நிவாரண நிதி தொடர்பாக நிறைய முயற்சிகளை எடுத்தது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து தமிழக விவசாயிகளின் கோரிக்கையை கொடுக்க உள்ளேன். அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் விவசாயிகள் போராட்டத்தை நான் பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com