சதுப்பு நிலங்களை பதிவு செய்தவர்கள் யார்? அறிக்கை அளிக்க உத்தரவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் சட்ட விரோதமாக 202 பத்திரப் பதிவுகளை பதிவு செய்த சார் பதிவாளர்கள் யார் என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சென்னை மண்டல

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் சட்ட விரோதமாக 202 பத்திரப் பதிவுகளை பதிவு செய்த சார் பதிவாளர்கள் யார் என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சென்னை மண்டல பத்திரப்பதிவு ஐஜி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், பல கோடி மதிப்புள்ள 66.70 ஏக்கர் பரப்பளவை மோசடி ஆவணங்கள் மூலம் ரூ.66 கோடிக்கு விற்பனை செய்த வழக்கில், லட்சுமணன், அழகிரி ஆகிய இருவரும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் அவர் தனது உத்தரவில், சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக, கடந்த 2015-இல் உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ஆகையால் தமிழகம் முழுவதும், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் பத்திரப் பதிவு செய்யப்பட்ட சதுப்பு நிலங்கள் பற்றிய விவரங்கள், ஆவணங்களை பத்திரப் பதிவு ஐஜி 12 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பத்திர பதிவுத் துறை ஐஜி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக, கடந்த 1990 முதல் தற்போது வரை 202 பத்திரப்பதிவுகள் மூலம் நிலங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து நீதிபதி, இந்த 202 பத்திரப் பதிவுகளையும் செய்த சார் பதிவாளர்கள் யார்? அவர்களில் எத்தனை பேர் தற்போது பணியில் உள்ளனர்? எத்தனை பேர் ஓய்வு பெற்றுள்ளனர்? சதுப்பு நிலத்தை பத்திரப்பதிவு செய்ததற்காக இந்த அதிகாரிகள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பத்திரப்பதிவுத் துறை ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க வேலி அமைப்பது குறித்து வனத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், பத்திரப்பதிவுத் துறை, குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 3 வாரத்துக்குள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்.
மேலும் ஆக்கிரமிப்பாளர்களில் எத்தனை பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்ற அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 17-க்கு ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com