விவசாயிகளிடம் பாராமுகம் காட்டுவது வேதனையளிக்கிறது: ஜி.கே.வாசன்

தமிழக விவசாயிகளின் போராட்டத்தில், மத்திய-மாநில அரசுகள் பாராமுகமாக இருப்பது வேதனையளிக்கிறது என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  தலைவர் ஜி.கே.வாசன்.
விவசாயிகளிடம் பாராமுகம் காட்டுவது வேதனையளிக்கிறது: ஜி.கே.வாசன்

தமிழக விவசாயிகளின் போராட்டத்தில், மத்திய-மாநில அரசுகள் பாராமுகமாக இருப்பது வேதனையளிக்கிறது என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  தலைவர் ஜி.கே.வாசன்.

பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வறட்சி நிவாரணம், நதிநீர்ப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களது போராட்டத்தை அங்கீகரிக்காமல் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பாராமுகமாக செயல்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளின் அருகிலுள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை எதிர்த்தும், காலஅவகாசம் கேட்டும் அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்வது சரியல்ல. மதுவிலக்கு மீது கொள்கை அளவில் ஆளுங்கட்சியினருக்கு விருப்பமில்லாததைக் காட்டுகிறது.

காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி திரவஉந்தும நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் இம்மாவட்ட பொறியியல் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்க வேண்டும். தாதுமணல் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். சட்டவிதிகளுக்கு உள்பட்டு தொழில்கள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் தட்டுபாடின்றி பொருள்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.

திருநெல்வேலியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுற்றுவட்ட சாலை அமைக்க வேண்டும். கடன் தொல்லையால் தற்கொலை செய்த மானூர் விவசாயி குடும்பத்துக்கு நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் அப்போதைய சூழலுக்கு ஏற்ப கருத்து ஒற்றுமையுடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பொருத்தவரை, தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகள், உத்தரவுகள் 100 சதவீதம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டால் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிய முடியும் என்றார் அவர்.

தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com