அண்ணாமலைப் பல்கலை.யிலிருந்து மேலும் 547 பேரை அரசுக் கல்லூரிகளுக்கு மாற்ற முடிவு: பேராசிரியர்கள் எதிர்ப்பு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து மேலும் 547 பேரை, அரசுக் கல்லூரிகளுக்கு பேராசிரியர்களாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து மேலும் 547 பேரை, அரசுக் கல்லூரிகளுக்கு பேராசிரியர்களாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முறைகேடு காரணமாக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. அதைத்தொடர்ந்து அங்கு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 2016 மார்ச் மாதம், அந்தப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருந்த 367 உதவிப் பேராசிரியர்களை மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் பலர், உரிய கல்வித் தகுதி பெறவில்லை என்பது தெரிய வந்தது.
தகுதியற்ற இவர்களை ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக நியமிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பையும் மீறி அவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இருந்தபோதும், இவ்வாறு பணியமர்த்தப்பட்டவர்களில், 10-2-3 என்ற அடிப்படையில் பள்ளிப்படிப்பையும், பட்டப்படிப்பையும் முறையாக படிக்காதவர்களை மட்டும் அரசு திரும்ப அழைத்துக் கொண்டது.
மீண்டும் 547 பேர்: இந்த நிலையில், அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் இருந்து மேலும் 547 பேரை அரசு கல்லூரிகளுக்கு பேராசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற தலைவர் செல்வராஜ் கூறியது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1,080 அனைத்து நிலைப் பணியாளர்கள் கூடுதலாக இருப்பதாக அரசு தற்போது கணக்கிட்டுள்ளது. இவர்களில் ஆசிரியராக பணியாற்றி வந்த 547 பேரை அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது. இது, பட்டம் முடித்து வேலைவாய்ப்புக்காக பல ஆண்டுகள் காத்திருக்கும் இளைஞர்களின் வாய்ப்பைப் பறிக்கும் செயலாகும்.
அதுமட்டுமன்றி, அரசுக் கல்லூரிகளில் 3,300-க்கும் அதிகமான கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து ஊழியர்களை மாற்றும் முடிவை அரசு கைவிடவேண்டும்.
அவர்களை, அந்தப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நியமிக்க வேண்டும் என செல்வராஜ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com