நீதிமன்றத் தடையை மீறி 9,760 அங்கீகாரமில்லா வீட்டு மனைகள் பத்திரப் பதிவு

அங்கீகாரமற்ற நிலங்கள், வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்தத் தடை காலத்தில், 9,760 அங்கீகாரமில்லா வீட்டு மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக
நீதிமன்றத் தடையை மீறி 9,760 அங்கீகாரமில்லா வீட்டு மனைகள் பத்திரப் பதிவு

அங்கீகாரமற்ற நிலங்கள், வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்தத் தடை காலத்தில், 9,760 அங்கீகாரமில்லா வீட்டு மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி விளை நிலங்களை அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர். எனவே, முறையற்ற வழிகளில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, விளை நிலங்களை வீட்டு மனைகளாக 'லே-அவுட்' போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என கடந்தாண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி தடை விதித்தது.
இந்தத் தடை உத்தரவை நீக்கக்கோரி, ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கங்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அங்கீகாரமில்லா வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக வரைவு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு விட்டன.
இந்த விதிகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன், விதிகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்படும் என, தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இடைக்காலத் தடை காலத்தில் ஏதாவது பத்திரப்பதிவு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து, அரசு அறிக்கை அளிக்க வேண்டும். அவ்வாறு பத்திரப்பதிவுகள் நடைபெற்று இருந்தால் அது செல்லாது என, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு, கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.ஹன்ஸ்ராஜ் வர்மா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி, கடந்தாண்டு செப்டம்பர் 9 முதல் இந்தாண்டு மார்ச் 28-ஆம் தேதி வரை, 9 ஆயிரத்து 760 அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை சார் பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாளில் வரைமுறை விதிகள் வெளியீடு: அதைத்தொடர்ந்து ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர், அங்கீகாரமற்ற நிலங்கள், வீட்டுமனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக விதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இதுகுறித்த அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை மே 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com