முதல்வர் இன்று மதுரை வருகை: ரூ. 53 கோடி மதிப்பிலான கட்டுமானங்களை திறந்து வைக்கிறார்

முதல்வர் இன்று மதுரை வருகை: ரூ. 53 கோடி மதிப்பிலான கட்டுமானங்களை திறந்து வைக்கிறார்

மதுரைக்கு வெள்ளிக்கிழமை வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, இங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள் உள்ளிட்ட சுமார் ரூ. 53 கோடி மதிப்பிலான கட்டுமானங்களை திறந்து வைக்கிறார்.
அரசு நிகழ்ச்சி மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில் நடத்தப்படும் இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க வெள்ளிக்கிழமை பகல் 12.45-க்கு மதுரை விமான நிலையம் வருகிறார் முதல்வர். பின்னர் சுற்றுச்சாலையில் மதுரை-சிவகங்கை சாலை சந்திப்பு அருகே ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெறும் இளைஞர் பெருவிழாவில் பங்கேற்கிறார். அங்கு இளைஞர்களுடன் மதிய உணவருந்தும் முதல்வர் சற்றுநேரம் அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் இல்லத்தில் ஓய்வு எடுக்கும் முதல்வர், மாலை 6 மணிக்கு ஆரப்பாளையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
இந்த விழாவில், ரூ. 30.47 கோடி மதிப்பிலான சிம்மக்கல்-செல்லூரை இணைக்கும் திருமலைராயர் படித்துறை பாலத்தையும், ஆரப்பாளையம்-அருள்தாஸ்புரத்தை இணைக்கும் உயர்மட்ட பாலத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். மேலும் மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் வட்டங்களுக்கு புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு, பெருமாள்பட்டி, பூசலபுரம், விக்கிரமங்கலம் ஆகிய இடங்களில் அரசு கள்ளர் பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் கூடுதல் வகுப்பறை, சட்டக் கல்லூரி மாணவியர் விடுதி என மொத்தம் சுமார் ரூ. 53 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை அவர் திறந்து வைக்கிறார்.
இளைஞர் பெருவிழா: பின்னர் இரவு 7 மணிக்கு இளைஞர் பெருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 25 ஆயிரம் பேருக்கு விளையாட்டு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். இரவில் அவர் விமான மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com