கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: போலீஸ் காவலில் இருந்த இருவர் கேரள சிறைக்கு மாற்றம்

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்த இருவர், மீண்டும் கேரள மாநிலம், மஞ்சேரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்த இருவர், மீண்டும் கேரள மாநிலம், மஞ்சேரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் தலைமறைவாகவுள்ள மற்றொரு குற்றவாளி குறித்தும், கூடலூர் சோதனைச் சாவடியில் கொள்ளையர்களிடம் கையூட்டுப் பெற்று 4 குற்றவாளிகளைத் தப்ப விட்ட காவல்துறையினர் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஏப்ரல் 23-ஆம் தேதி நள்ளிரவில் காவலாளி ஒம் பகதூரைக் கொலை செய்துவிட்டு, ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் அறைகளை உடைத்து உள்ளேயிருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த சூழலில், காவல்துறையினரின் விசாரணை, நிர்வாக வசதிகளுக்காக தற்போது இவ்வழக்கு கோத்தகிரி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விட்டதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவங்கள் தொடர்பாக கேரள மாநிலம், மலப்புரத்தில் கைது செய்யப்பட்ட ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி ஆகிய இருவரும் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், போலீஸாரின் விசாரணைக்காக 3 நாள்களுக்கு நீலகிரி மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், போலீஸ் விசாரணையையடுத்து இவர்கள் இருவரும் கோத்தகிரி நடுவர் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் ஸ்ரீதர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் கேரள மாநிலம், மஞ்சேரி சிறைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 11 பேர் தொடர்புடைய இவ்வழக்கில் தலைமறைவாகவுள்ள ஒருவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, கூடலூர் சோதனைச் சாவடியில் ஏப்ரல் 14-ஆம் தேதி நிகழ்ந்த வாகனத் தணிக்கையில் கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நேரடியாகப் பார்த்ததோடு, அவர்களை அங்கிருந்து தப்பவிட்ட காவல் துறையினர் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com