மருத்துவர்களின் போராட்டம் - எஸ்மா சட்டம் பாயுமா?

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் போராட்டம் பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் போராட்டம் - எஸ்மா சட்டம் பாயுமா?

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் போராட்டம் பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுட்டு வந்தனர். பத்திரப் பதிவுத் துறை, வணிகவரித் துறை, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வட்டாட்சியர்கள், உள்ளிட்ட 64 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் நிதி அமைச்சர் ஜெயக்குமார், பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வருவாய்த் துறைஅமைச்சர் உதயகுமார் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த பின் அரசு ஊழியர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்து விட்டார்.

மருத்துவர்களின் போராட்டம்

மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது. மீண்டும் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சங்கத்தில் சுமார் 15,500 மருத்துவர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று காலை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர்கள் போராட்டத்தால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியதோடு, தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 5.5.2017 மதியம் 2.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். அப்போது, உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்தில், அரசியல்வாதிகள், நீதிபதிகள் என யாரும் அரசு மருத்துவமனையை அணுகுவதில்லை. மருத்துவர்கள் தொழிலாளர்கள் இல்லை. கடவுள்போல் மக்களால் மதிக்கப்படுபவர்கள். நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று கூறியது.

மேலும், வழக்கு இருக்கிறபோது போராட்டம் நடத்துவது நீதிமன்றத்தை நம்பவில்லை என்பதாகும் என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், மருத்துவர்களுடன் மீண்டும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் எஸ்மா சட்டம் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தியதோடு, வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவித்தது.

எஸ்மா சொல்வது என்ன?

அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம்,1968 (THE ESSENTIAL SERVICES MAINTENANCE ACT, 1968). 1968, ஆண்டு இயற்றப்பட்டு டிசம்பர், 28 முதல் அமலுக்கு வந்தது.

அத்தியாவசியச் சேவைகள் எவை?

பிரிவு 1 (a) இல் குறிப்பிட்டவைகளான

I. தபால், தொலைபேசி சேவை

II. ரயில்வே சேவை மற்றும் இதர போக்குவரத்துச் சேவைகள்

III. வானூர்தி சேவை மற்றும் அதன் பராமரிப்பு

IV. எந்த துறைமுகங்களிலும் பொருட்களை ஏற்றல், இறக்கும் சேவை

V. கஸ்டம்சில் பொருட்களை தடைநீக்கம் (Clearance) செய்யும் சேவை

VI. நாணயங்கள், கரன்சி அச்சடிக்கும் சேவை

VII. அரசு சமுதாயத்துக்கு அத்தியாவசியம் என முடிவு செய்துள்ள சேவைகள் ஆகும்

பிரிவு 6 - வேலை நிறுத்தம் (Strike) என்பது அரசின் அமர்த்தப்பட்ட பணியை செய்ய ஒப்புக்கொண்டு ஊழியர்கள் கூட்டமாக பணிக்குச் செல்லாமல் அல்லது வேலை செய்யாமல் அல்லது ஏக மனதுடன் இப்படிப்பட்ட ஊழியர்கள்

I. அத்தியாவசியப் பணியை செய்ய மறுத்தாலோ அல்லது

II. நடந்து கொள்ளும் விதத்தில் பணி பாதிப்பு ஏற்பட்டாலோ அது “வேலை நிறுத்தம்”ஆகும்.

அரசின் உத்தரவு

பிரிவு 3(1) இன் படி,

1. அரசுக்கு பொதுநலன் கருத்தில் கொண்டு வேலைநிறுத்ததை உத்தரவின் பேரில் தடுத்து நிறுத்தலாம்.

2. அப்படியான அரசின் உத்தரவு ஆறு மாதம் வரை அமலில் இருக்கும்.

பிரிவு 4(1) (a) அப்படியான உத்தரவின் படி எந்த அரசு ஊழியரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளக் கூடாது.

அப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின் வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்திருந்தாலோ, தொடங்கப்பட்டிருந்தாலோ வேலை நிறுத்த அறிவிப்பு கொடுத்திருந்தாலோ, தொடங்கப்பட்டிருந்தாலோ வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலோ அந்த ஊழியர் சட்ட விரோதமானவராவார்.

தண்டனைகள் (பிரிவு 4)

வேலை நிறுத்ததை தொடங்கும் எந்த ஊழியரும் ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 200 ரூபாய் அபராதம் தண்டனையாகும்.

வேலை நிறுத்ததிற்கு மறைமுகமாகவோ, நேரிடையாகவோ தூண்டுதல் சக ஊழியரை தூண்டுதல் செய்பவருக்கு 1 வருடம் சிறைத் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் தண்டனையாகும். (பிரிவு 5)

வேலை நிறுத்தத்திற்கு நிதி உதவி செய்தல்

எவரொருவர் தெரிந்தே, இவ்வாறான வேலை நிறுத்தத்திற்கு செலவு செய்தாலோ, நிதி உதவி அளித்தாலோ, பணம் கொடுத்தாலோ 1 வருடம் சிறைதண்டணையும், 1000 ரூபாய் அபராதமும் தண்டனையாகும். (பிரிவு 6)

கைது (பிரிவு 17)

இப்படியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மூதி, ஒரு காவல் அலுவலர் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி வாரண்ட் இன்றி கைது செய்யலாம்.

பிரிவு 8 மற்ற சட்டங்கள் மேல் மேலாதிக்கம்

தொழிலாளர் நலச் சட்டம், 1947 போன்ற சட்டங்கள் மேல் இச்சட்டம் மேலாதிக்கம் செய்யும்.

வேலை சேவை

படித்து முடித்தவுடன் நல்ல வேலைக்கு சேரவேண்டும் என்பதுதான் எல்லா இளைஞர்களின் கனவு. அதிலும், அரசு வேலைக்கு ஆசைப்படாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். ஆனால், திறமை படைத்தவர்களாக இருந்தும் அதற்கேற்ற வாய்ப்புகள் இன்றி அல்லாடுவது கொடுமையான விஷயம். இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போர் பட்டியல் நாடாளுமன்றத்தில் கடந்த 2014-இல் சமர்ப்பிக்கப்பட்டது. தொழிலாளர் அமைச்சகம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், நாடு முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 4.47 கோடி பேர் காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில வாரியாக புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருந்தன. மாற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 77லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்துக்கிடக்கின்றனர் என்கிறது அந்த புள்ளிவிவரம். காத்திருப்போர் எண்ணிக்கையில் 70.48 லட்சம் பேர் கொண்ட மேற்கு வங்கம் 2வது இடத்திலும், 60.70லட்சம் பேர் பதிவு செய்து உத்தர பிரதேசம் 3-வது இடத்திலும்உள்ளன.

ஆரம்பத்தில் அரசு பணி பெறும் வரை எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்து பின் பணியில் சேர்ந்தவுடன், பணியை செய்யாமல் சங்கம், வேலை நிறுத்தம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதால் பின்னாளில் சட்டமோ, மக்களோ எவ்விதத்திலும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்பதை அறிய வேண்டும்.

விடுமுறை, பிள்ளைகள் கல்வி என வெளியே செல்லும் நேரத்தில் வரும் மே 15ம் தேதி முதல் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதில் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2002-ம் ஆண்டு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு (எஸ்மா) சட்டத்தின் கீழ், வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்களின் தலைவர்களை கைது செய்ததோடு, தமிழ்நாடு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு (டெஸ்மா) சட்டம் என்ற புதிய அவசரச் சட்டம் அமல்படுத்தி பணியாளர்களை வேலை நீக்கமும் (டிஸ்மிஸ்) செய்ய அரசை தூண்டியதை மறக்கக் கூடாது.

எஸ்மா சட்டத்திற்கு நீதிமன்றமே பச்சை கொடி காட்டியுள்ள நிலையில், எஸ்மா பாய்ந்தால் மக்கள் மகிழ்ச்சியே அடைவர் என்பதை அறிய வேண்டும். மேலும், இது போன்ற சங்கத்தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட வைப்பதன் பின்னணி என்ன என்பது ஆராய வேண்டிய ஒன்று.

- CP. சரவணன் (தொடர்புக்கு - 9840052475)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com