காணாமல் போன மேற்கு வங்க தொழிலதிபர் கொலை: பூத்துறையில் உடல் மீட்பு

புதுச்சேரியில் காணாமல் போனதாக கருதப்பட்ட மேற்குவங்க தொழிலதிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
காணாமல் போன மேற்கு வங்க தொழிலதிபர் கொலை: பூத்துறையில் உடல் மீட்பு

புதுச்சேரியில் காணாமல் போனதாக கருதப்பட்ட மேற்குவங்க தொழிலதிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அவரது உடல் தமிழக பகுதியான பூத்துறையில் கழிவநீர் தொட்டியில் இருந்து இன்று மீட்கப்பட்டது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலதிபர் விவேக்பிரசாத். கட்டட ஒப்பந்த தொழிலதிபரான இவர் புதுச்சேரி 100 அடி சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. தமிழகப் பகுதியான பூத்துறையில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணியில் விவேக் பிரசாத் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 1-ம் தேதி வெளியில் சென்ற விவேக் பிரசாத் காணாமல் போய்விட்டார் என அவரது மனைவி ஜெயந்தி ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே வம்பாகீரப்பாளையம் கலங்கரைவிளக்கம் அருகே கடற்கரைப்பகுதியில் மோட்டார் சைக்கிள் நிற்பதை அப்பகுதியினர் கண்டனர். ரூ.5 லட்சம் மதிப்புள்ள அந்த மோட்டார் சைக்கிள் கேட்பாரின்றி கிடந்ததால், அதில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களைக் கொண்டு விவேக் பிரசாத் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஓதியஞ்சாலை போலீஸார் மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்று ஒப்படைத்தனர்.

இதற்கிடையே ரெட்டியார்பாளையம் போலீஸாருக்கு விவேக் பிரசாத் காணாமல் போன விதம் தொடர்பாக சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து எஸ்.பி. ரச்சனா சிங் தலைமையிலான போலீஸ் படை பூத்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணிகள் நடக்கும் இடத்தில் விசாரணை மேற்கொண்டது. அந்த வளாகத்தில் சிமெண்ட் மூட்டைகள் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்த பகுதி மட்டும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அப்பகுதியில் சோதனை செய்த போது, ரத்தத்துளிகள் கிடந்தன. மேலும் தார்ப்பாய் ஒரு பகுதி எரி்ந்த நிலையில் கிடந்தது.

தீவிரமாக அப்பகுதியில் சோதனை செய்தபோது கழிவுநீர் தொட்டி மூடப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்த போது, அதில் விவேக் பிரசாத்தின் சடலம் ரத்தக்காயங்களுடன் கிடந்தது.

அவரது மனைவி ஜெயந்தி, தம்பி விகாஸ் ஆகியோர் உடலை அடையாளம் காண்பித்தனர். இதன் பின் அவரது சடலத்தை ஆரோவில் போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் விவேக் பிரசாத்தின் உதவியாளராக இருந்த சுல்தான்பேட்டையைச் சேர்ந்த பாபு என்பவரை போலீஸார் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

அதே போல் விவேக் பிரசாத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்தில் போலீஸார் கொண்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து எஸ்.பி. ரச்சனா சிங் கூறியதாவது:
தொழிலதிபர் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அவர் பணத்துக்காக கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என விசாரிக்கப்படுகிறது. விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றார்.

தொழிலதிபர் விவேக்பிரசாத் உடல் மீட்கப்பட்டது தமிழக பகுதி என்பதால் ஆரோவில் போலீஸாரும் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com