நீதிபதி கர்ணன் எங்கே? இருப்பிடம் தெரியாமல் போலீஸார் திணறல்

உச்ச நீதிமன்ற நீதிபதியை அவமதித்த குற்றத்துக்காகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நீதிபதி கர்ணன் தலைமறைவாகியுள்ளார்.
நீதிபதி கர்ணனை கைது செய்ய சென்னை வந்துள்ள மேற்கு வங்க போலீஸார்
நீதிபதி கர்ணனை கைது செய்ய சென்னை வந்துள்ள மேற்கு வங்க போலீஸார்

உச்ச நீதிமன்ற நீதிபதியை அவமதித்த குற்றத்துக்காகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நீதிபதி கர்ணன் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடி மேற்கு வங்க காவல்துறையினர் புதன்கிழமை மாலை ஆந்திரம் சென்றனர். ஆந்திரத்திலும் அவர் கிடைக்காததால் போலீஸார் சென்னை திரும்பினர்.
இதுகுறித்த விவரம்: தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.கர்ணன் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்து வருகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகக் கடந்த 2015-ஆம் ஆண்டு கர்ணன் இருந்தபோது, சக நீதிபதிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட சில நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கர்ணன் கூறினார்.
தனது குற்றச்சாட்டு குறித்து, பிரதமருக்கும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் புகார் கடிதம் அனுப்பினார். இந்நிலையில் கர்ணன், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கும் பிற நீதிபதிகளுக்கும், கர்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த ஜனவரியில் 20 நீதிபதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கர்ணன் வெளியிட்டு. பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், நீதிபதி கர்ணன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்ணன் கடந்த மார்ச் 31-இல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவருக்கு பதிலளிக்க 4 வாரம் தரப்பட்டது. ஆனால் கர்ணன் உச்சநீதிமன்றத்துக்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை.
இதனையடுத்து, கர்ணனுக்கு மனநலப் பரிசோதனை செய்யும்படி உச்சநீதிமன்றம் கடந்த 1-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால் கர்ணன், மனநலப் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தார். இந்நிலையில் கர்ணன், தனக்கு மனநலப் பரிசோதனை செய்ய உத்தரவிட்ட 7 நீதிபதிகளுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிப்பதாக உத்தரவிட்டார்.
கர்ணனின் இந்த அதிரடியான தீர்ப்பு, நீதித்துறையை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 7 பேர் கொண்ட அமர்வில், கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த அமர்வு, நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டதாலும், மனநலப் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காததாலும் கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டது. கர்ணன் அளிக்கும் அறிக்கைகள், பேட்டிகளை ஊடகங்களில் வெளியிடக் கூடாது எனவும் தடை விதித்தது. இதற்கிடையே நீதிபதி கர்ணன் செவ்வாய்க்கிழமை காலை கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் அவர் தங்கினார். அதே வேளையில் மேற்கு வங்க போலீஸார் கர்ணனைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் ஆலோசனை: இந்நிலையில் மேற்கு வங்க மாநில காவல்துறை டி.ஜி.பி.சுரஜித்கார் புர்கயஷா, ஏ.டி.ஜி.பி. ரன்பீர்குமார், எஸ்.பி. சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அடங்கிய குழு கர்ணனை கைது செய்ய, விமானம் மூலம் புதன்கிழமை காலை சென்னைக்கு வந்தது. இந்தக் குழுவினர் எழும்பூரில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இல்லத்தில் தங்கினர். பின்னர் அவர்கள், கர்ணனை கைது செய்வது குறித்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் கரண்சின்கா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
கர்ணன் தங்கியிருந்த சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸார், அங்கு நடத்திய விசாரணையில் கர்ணன், தனது சொந்தக் காரில் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயிலுக்குச் சென்றிருப்பது தெரியவந்தது.
ஆந்திரம் விரைந்தனர்: மேற்கு வங்க போலீஸார் சென்னை போலீஸார் உதவியுடன், சந்தேகத்தின் அடிப்படையில் அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் சோதனை செய்தனராம். ஆனால் அங்கு கர்ணன் இல்லை. இதையடுத்து மேற்கு வங்க போலீஸார், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர் கரண்சின்காவுடன் ஆலோசித்தனர். ஆலோசனையின் முடிவில், மேற்கு வங்க போலீஸார், கர்ணனை ஆந்திரத்தில் கைது செய்வது என முடிவு செய்து 3 கார்களில் சென்னையில் இருந்து மாலை 4.30 மணியளவில் ஆந்திரத்துக்கு புறப்பட்டனர். அவர்களுடன் உதவிக்காக சென்னை காவல்துறை சார்பில் திருவல்லிக்கேணி உதவி ஆணையர் ஆரோக்கிய ஞானப்பிரகாசம் சென்றார்.
சென்னை திரும்பினர்
நீதிபதி சி.எஸ்.கர்ணனைத் தேடி ஆந்திரம் சென்ற மேற்கு வங்க போலீஸார் புதன்கிழமை இரவு சென்னை திரும்பினர்.
ஆந்திரம் சென்ற மேற்கு வங்க போலீஸார் சூலூர்பேட்டை, தடா பகுதியில் ஆந்திர போலீஸாருடன் ஆலோசனை செய்தனர்.
ஆந்திர போலீஸார் கர்ணன் தங்களது மாநிலத்துக்குள் இல்லை எனக் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து மேற்கு வங்க போலீஸார், தங்களது திட்டத்தைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டு அங்கிருந்து சென்னைக்கு வந்தனர்.
கர்ணனைக் கைது செய்வது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மேற்குவங்க போலீஸார் ஆலோசனை செய்தனர்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com