பெண் அதிகாரி மீனாட்சியை மிரட்டிய அமைச்சர் சரோஜாவை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்குக: மு.க. ஸ்டாலின்

பெண் அதிகாரி மீனாட்சியை மிரட்டிய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பெண் அதிகாரி மீனாட்சியை மிரட்டிய அமைச்சர் சரோஜாவை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்குக: மு.க. ஸ்டாலின்

பெண் அதிகாரி மீனாட்சியை மிரட்டிய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி மீனாட்சியிடம் 30 லட்சம் ரூபாய் கேட்டு, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மிரட்டியிருப்பது கடும் கண்டத்திற்குரியது. அப்பாயின்மெண்ட் முதல் டிரான்ஸ்பர் வரை அனைத்திலும் ஊழல் என்பது அதிமுக ஆட்சியின் மிகப்பெரிய அவலமாக இருக்கின்றது. டெண்டர்களாக இருந்தால் “சதவீதம்”, நியமனங்கள், மாறுதல்களாக இருந்தால் “ரேட்” என விதவிதமாக லஞ்சத்திற்கு அளவுகோல் வரையறுத்து ஒரு அலங்கோலமான ஆட்சியை அதிமுக நடத்திக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் இப்படியொரு ஆட்சியை இதுவரை தமிழக மக்கள் கண்டதில்லை என்று கூறும் அளவிற்கு மக்கள் பிரச்சினைகள் பற்றியே கவலைப்படாமல், வசூல் மட்டுமே பிரதான இலக்கு என்ற அடிப்படையில் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது.
 
அதிமுக உடைவதும், பிறகு இணைப்புக்கு திரை மறைவில் நாடகம் நடத்துவதும் ஊழலை இணைந்து செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே என்ற நிலை இன்று உருவாகியிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கிறது. ஒரு பெண் அதிகாரி என்று கூட பாராமல் ஒரு பெண் அமைச்சரே லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார் என்றால், எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் அமைச்சர்களோ, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களோ இல்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்துத் துறைகளிலும் நடக்கும் லஞ்ச லாவண்யங்களையும், இதுபோன்ற அமைச்சர்களின் மிரட்டல்களையும் ஒரு முதல்வர் சகித்துக் கொண்டிருப்பது மிக மோசமான முன்னுதாரணம் ஆகும்.
 
பதவியை தக்க வைத்துக்கொள்ள கமிஷன் கலாச்சாரத்தை தாராளமயமாக்குவது ஒரு ஆட்சிக்கு அழகல்ல. அமைச்சரவைக்கு கூட்டுப் பொறுப்பு உண்டு என்பது ஊழல் செய்வதற்கோ அல்லது ஊழல் செய்யும் அமைச்சர்களை மனமகிழ்ச்சியுடன் காப்பாற்றுவதற்காகவோ அல்ல என்பதை முதல்வர் உணர வேண்டும். அமைச்சர் சரோஜாவின் இந்த மிரட்டல் புதிதல்ல என்பதற்கு சான்றாக, இதுவரை அதிமுக ஆட்சியில் பல்வேறு ஊழல் மற்றும் மிரட்டல் சம்பவங்கள் நடைபெற்று விட்டன.
 
ஏற்கனவே லஞ்சம் கேட்டதால் தமிழகத்திற்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக வெளி மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன.   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம், மாறுதல் என்று பட்டியல் போட்டு ஒரே மாதத்தில் 5 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் பணத்தை வசூல் செய்து வருமான வரித்துறை சோதனையில் “சிரிப்பாய் சிரித்ததை” யாரும் மறந்திருக்க முடியாது. இன்னொரு அமைச்சர் காமராஜ் மீது மிரட்டி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. ’ஆச்சர்யம் ஆனால் உண்மை’ என்பதுபோல், இந்த அமைச்சர்கள் அனைவருமே இன்னும் அமைச்சரவையில் நீடிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் பொதுவாழ்வில் தூய்மை என்பதற்கே அர்த்தமில்லாமல் போய் விட்டதையும், ஊழல்களில் மிதப்பதை அதிமுக அமைச்சர்கள் சாதனையாக நினைப்பதையும் இன்றைக்கு மக்கள் வேதனையுடன் பார்க்கிறார்கள்.
 
போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் கூட கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் இன்னுயிரைக் கூட மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். குடிநீர் கிடைக்காமல் தாய்மார்கள் காலிக்குடங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வால் மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டு அவமானப்பட்டு நிற்கிறார்கள். ஆனால் மாண்புமிகு முதல்வரோ, அமைச்சர்களோ மக்களின் மிக முக்கியமான அடிப்படைப் பிரச்னைகளில் ஆர்வம் காட்டுவதும் இல்லை, மாணவர்களின் நிலை குறித்து கவலை கொள்ளவும் இல்லை.  அதற்கு பதிலாக அமைச்சர்கள் இப்படி நேரடியாக அதிகாரிகளை மிரட்டி - குறிப்பாக பெண் அதிகாரியை மிரட்டி லஞ்சம் கேட்கும் காரியங்களில் சுதந்திரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது மக்களாட்சி தத்துவத்தின் மாண்புகளை குழி தோண்டிப் புதைக்கும் செயல் மட்டுமல்ல- எப்படி வேண்டுமானாலும் ஊழல் செய்து கொள்ளுங்கள் என்று லைசென்ஸ் வழங்கும் செயலாகும். தங்களின் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்தார்களே தவிர, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சுயநலன்களுக்காகவும், அமைச்சர்கள் ஊழல் செய்வதற்காகவும் அல்ல என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
ஆகவே, அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை தட்டிக்கேட்டு தயவுதாட்சயன்மின்றி தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன் வர வேண்டும். தமிழக அரசு நிர்வாகம் ஊழல் மயமாகியிருப்பது எதிர்கால தலைமுறைக்கும், மாநில வளர்ச்சிக்கும் நல்லதல்ல என்பதை உணர்ந்து, பெண் அதிகாரி மீனாட்சியை மிரட்டிய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கி, அந்தப் பெண் அளித்துள்ள புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து அமைச்சர் சரோஜா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com