கால்நடை மருத்துவப் படிப்பு: 40 இடங்கள் அதிகரிப்பு?

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் (பிவிஎஸ்சி), நிகழ் கல்வியாண்டில் 40 இடங்கள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கால்நடை மருத்துவப் படிப்பு: 40 இடங்கள் அதிகரிப்பு?

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் (பிவிஎஸ்சி), நிகழ் கல்வியாண்டில் 40 இடங்கள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்புக்கு அடுத்தபடியாக, கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது.
தமிழக கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு (பி.வி.எஸ்.சி.) 320 இடங்கள் உள்ளன.
இதுதவிர, நான்கு ஆண்டுகள் பி.டெக். உணவு தொழில்நுட்ப படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்ப படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்ப படிப்புக்கு 20 என மொத்தம் 380 இடங்கள் உள்ளன.
மாணவர்கள் ஆர்வம்: ஆண்டுதோறும் கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வேறு தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இதன் காரணமாக அதிகரித்து வரும் தேவையைக் கணக்கில் கொண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் கூறியது:
நிகழ் கல்வியாண்டில் கால்நடை மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 40 இடங்கள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாணவர் சேர்க்கை குழுவின் அனுமதியைப் பெற வேண்டிய நடைமுறை உள்ளது.
அனுமதி கிடைத்த உடன், நிகழ் கல்வியாண்டில் பி.எவி.எஸ்.சி. படிப்புக்கான மொத்த இடங்கள் 360 ஆக அதிகரிக்கும். இன்னும் ஓரிரு நாள்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றார் அவர்.
அகில இந்திய ஒதுக்கீடு: கால்நடை மருத்துவப் படிப்புகளிலும் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும்.
இந்த முறை எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களை நீட் மதிப்பெண்ணின் அடிப்படையில் நிரப்புவதற்கு இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் நீட் தேர்வின் மதிப்பெண்ணைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது என்று மத்திய அரசின் சார்பில் அனைத்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் தகவல் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை!

ல்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு நிகழ் கல்வியாண்டில் (2017 -18) பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்பட உள்ளன.
இதனால் மாநில ஒதுக்கீட்டின்கீழ் உள்ள 85 சதவீத இடங்களுக்கும் நீட் தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டு நிரப்பப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் இடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து துணைவேந்தர் எஸ்.திலகர் கூறுகையில், "பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டு, கட் - ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படும். அதனைக் கொண்டு தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இடங்கள் நிரப்பப்படும். எனவே,மாணவர்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com