தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகள் திறப்பு

தமிழகத்தில் புதிதாக மேலும் 7 மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளது. செயற்கை மணல் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை
தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக மேலும் 7 மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளது. செயற்கை மணல் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் தமிழக அரசே மணல் விற்பனை நிலையம் அமைத்து அதனை நடத்தும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5-ம் தேதி மதுரையில் அறிவித்ததைத் தொடர்ந்து மணல் விற்பனை நிலையங்களை அரசின் நேரடி மேற்பார்வையில் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்களுக்கு மணல் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் நீங்குவதுடன் குறைந்த விலையில் தேவைக்குத் தக்கபடி கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் எந்திரங்கள் மற்றும் மனிதசக்தியை பயன்படுத்தி இயங்கி வருகின்ற மணல் குவாரிகளுடன் மேலும் 7 புதிய மணல் குவாரிகள் அமைக்கவும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

புதிய மணல் குவாரிகளை பரவலாக அமைத்து பொதுமக்களுக்கு மணல் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில், ஆற்றங்கரைக்கு அருகில், அரசு மணல் விற்பனை நிலையங்கள் அமைத்து மணல் விற்பனை செய்யப்படும்.

இதுவரை மணலுக்கான விற்பனை தொகையை வங்கி வரைவோலை மூலமாக மட்டுமே செலுத்தும் நடைமுறை இருந்து வருகிறது. இனி வருங்காலங்களில் ‘டெபிட்’ அல்லது ‘கிரெடிட்’ கார்டு மூலமாகவும் பணம் செலுத்துவதற்கு மணல் விற்பனை நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். பொதுப்பணித்துறையிலும் மணல் விற்பனைக்கு போதுமான பணியாளர்களைப் பயன்படுத்தி மணல் விற்பனை செம்மையாக நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவையின் அவசியம் கருதி ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் உற்பத்தியை ஊக்குவித்து அதன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்துவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் அரசு மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளன.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் செயல்பட்ட 44 மணல் குவாரிகளில் 34 மணல் குவாரிகள் மூடப்பட்டன.

கடும் வறட்சி நிலவுவதால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தடைசெய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இதனால் திருச்சி, அரியலூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 9 குவாரிகளில் மணல் அள்ளுவது, கடந்த ஏப். 29-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

பின்னர் மணல் குவாரிகளை அரசே திறந்து நடத்தும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகாவுக்குட்பட்ட வீரகலூர் திண்ணக்குளம் பகுதியில், கூழையாற்றில் மூடப்பட்டிருந்த மணல் குவாரி புதன்கிழமை திறக்கப்பட்டது.

ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அதிகாரிகளின் நேரடி பார்வையில் மணல் விற்பனை தொடங்கியது. அதைத் தொடர்ந்து, கொண்டையம்பேட்டை, சீலைப்பிள்ளை புதூர் ஆகிய இடங்களில் மூடப்பட்டிருந்த குவாரிகளும் புதன்கிழமை திறக்கப்பட்டு, மணல் விற்பனை தொடங்கியுள்ளது.

அரசு சார்பில் திறக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளில், 2 யூனிட் மணல் ரூ. 800, மணல் அள்ளும் கூலி ரூ. 210, வரி ரூ. 40 என மொத்தம் ரூ. 1,050-க்கு வங்கி வரைவோலை (டி.டி) எடுத்து வருவோருக்கு மட்டுமே மணல் விற்கப்படுகிறது.

ஆனால், ஏராளமானோர் டிடி எடுக்காமல் மணல் வாங்க வந்திருந்தனர். அவ்வாறு வந்தவர்களை டிடி எடுத்து வருமாறு அறிவுறுத்தி திருப்பியனுப்பினர்.

இதற்கிடையே பல்வேறு காரணங்களைக் கூறி குவாரியில் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஹென்றி சேகர் தலைமையில் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர். போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், ஏற்கெனவே சுமார் 20 ஆழத்துக்கு மணல் தோண்டப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும் பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்த க்கூடாது. கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு மணல் அள்ளும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாகக் கூறினர்.

பின்னர் பணி வழங்குவதாகவும், பொக்லைன் இயந்திரம் மூலம் குறைந்த ஆழத்தில் மணல் அள்ளப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com