மாநிலத்திலேயே பிளஸ் 2 தேர்வெழுதிய ஒரே ஒரு திருநங்கை தேர்ச்சி

சென்னை அம்பத்தூரில், மாநிலத்திலேயே தேர்வெழுதிய ஒரே ஒரு திருநங்கை 537 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார்.
மாநிலத்திலேயே பிளஸ் 2 தேர்வெழுதிய ஒரே ஒரு திருநங்கை தேர்ச்சி

சென்னை அம்பத்தூரில், மாநிலத்திலேயே தேர்வெழுதிய ஒரே ஒரு திருநங்கை 537 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார்.

சென்னை அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாரிகாபானு (17) என்ற திருநங்கை 537 மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளார். இவர் மாநிலத்திலேயே தேர்வெழுதிய ஒரே ஒரு திருநங்கையாவார்.
இதுகுறித்து தாரிகா பானு கூறியது:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், எனது பெற்றோர் வீட்டைவிட்டு வெளியேற்றினார்கள். முகநூல் மூலம் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் பானு (29) என்பவரின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் என் நிலையை எடுத்துக் கூறினேன். அவர் ஏற்கெனவே 6 திருநங்கைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். தற்போது எனக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளார். நாங்கள் 7 பேரும் அவரை அம்மா என்றே அழைப்போம்.
அவரிடம் நான் படிக்கவேண்டும் என்று கூறினேன். அவர் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார். என்னுடைய அம்மா (பானு) எங்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தந்தார். என்னை பெற்றவர்கள் ஒதுக்கிய பிறகு எங்களை வாழ வைப்பவர் பானு அம்மா.
பள்ளியில் எங்கள் தலைமை ஆசிரியை குளோரி மேரி, வகுப்பு ஆசிரியைகள் பாசத்துடன் இருந்தனர். கடுமையாக படித்து தேர்ச்சி பெற்றேன். அரசு, எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.
இதுகுறித்து, பானு கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நான் திருநங்கையாக இருந்ததால், எனது பெற்றோர் என்னை புறக்கணித்துவிட்டனர். வீட்டிலிருந்து வெளியேறிய நான், மிகவும் சிரமப்பட்டு, பொறியியல் பட்டம் பெற்றேன்.
என்போன்று திருநங்கைகள் யாரும் சிரமமப்படக் கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் நோக்கிலும் உதவி புரிய வேண்டும் என நினைத்தேன். அதன்படி, முகநூல் மூலம் என்னை தொடர்பு கொண்ட 7 பேரையும், எங்களது வழக்கப்படி தத்தெடுத்துக் கொண்டேன். அவர்களுக்கு கல்வி, ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து வருகிறேன். தற்போது, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள எனது மகள் தாரிகா பானு மருத்துவம் படிக்க விரும்புகிறாள். அரசு இதற்கு உதவி புரிய வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com