புதுவை முன்னாள் முதல்வர் ராமசாமி காலமானார்

புதுவை முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி (83), வாணரப்பேட்டை பிரதான சாலையிலுள்ள உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை காலை காலமானார்.
புதுவை முன்னாள் முதல்வர் ராமசாமி காலமானார்

புதுவை முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி (83), வாணரப்பேட்டை பிரதான சாலையிலுள்ள உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை காலை காலமானார்.
கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தினமும் காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்வது வழக்கம். அவர் திங்கள்கிழமை காலை எழுந்திருக்கவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது, ராமசாமி உயிரிழந்தது தெரிய வந்தது. தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் வாணரப்பேட்டை வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் ராமசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, அவரது உடல் திங்கள்கிழமை மாலை சொந்த ஊரான காரைக்காலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
காரைக்கால் வீராசாமி நாயக்கர் தெருவில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, பின்னர் புதன்கிழமை காலை 8 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும்.
இரண்டு முறை முதல்வர்: புதுவை முன்னாள் முதல்வர் ராமசாமி தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார். அவருக்கு சிறப்பு அழைப்பாளர் பதவி வழங்கப்பட்டு இருந்தது.
எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய போது அந்தக் கட்சியில் அவர் இணைந்தார். அப்போது, புதுவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக திகழ்ந்தார்.
1974-ஆம் ஆண்டு நடைபெற்ற புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அப்போது, எஸ்.ராமசாமி முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற 22-வது நாளில் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. ஆனால், பட்ஜெட் விவரம் முன்கூட்டியே கசிந்து விட்டது. மேலும், அதிமுகவில் பல எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவி விட்டனர். இதனால், பதவியேற்ற 22-ஆவது நாளிலேயே ராமசாமி ஆட்சியை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
1977-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து, எஸ்.ராமசாமி மீண்டும் முதல்வர் ஆனார். அப்போதும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் கட்சி மாறியதால் 15 மாதங்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது.
பின்னர், அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அவர் மக்கள் முன்னணி என்ற கட்சியைத் தொடங்கினார். காரைக்கால் தெற்கு தொகுதியில் 4 முறை அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com