பேருந்து ஊழியர் வேலைநிறுத்தத்தால் இரண்டு நாளில் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?

பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த இரண்டு நாள்களில் மொத்தம் ரூ.40 கோடி
பேருந்து ஊழியர் வேலைநிறுத்தத்தால் இரண்டு நாளில் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த இரண்டு நாள்களில் மொத்தம் ரூ.40 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர்.
அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்காததைத் தொடர்ந்து வேலைநிறுத்த முடிவை வெளியிட்டனர்.

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (மே 15) முதல் வேலைநிறுத்தம் என அறிவித்தபோதும்கூட ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி விட்டு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தொடங்கினர். வார வேலைநாளின் முதல் நாளான திங்கள்கிழமை (மே 15) பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்பட்டது.

சென்னை, மதுரை, திருச்சி உள்பட பெரும்பாலான இடங்களில் பேருந்து சேவைகள் முடங்கின. தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் (மே 16) பேருந்து சேவை பல இடங்களில் பெரும் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி மற்றும் தொ.மு.ச. மாநில பொதுச் செயலர் எம்.சண்முகம், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டு பேருந்து ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 மண்டலங்களில் 22 ஆயிரம் பேருந்துகளும் 1,650 விரைவுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகரத்தில் மட்டும் 3,300 மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வேலை நிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ரூ.20 கோடி வீதம் இரு நாள்களில் மொத்தம் ரூ.40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசுடன் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு தொடர் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com