பெரியாறு புலிகள் சரணாலயத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்: கொடைக்கானல் வனப்பகுதிகளிலும் நடைபெறுகிறது

தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயத்தில் புதன்கிழமை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. அதே போல் கொடைக்கானல் வனப் பகுதிகளிலும் 3 நாள்கள் இப்பணி நடைபெறுகிறது.
தேக்கடி வனப்பகுதியில் கணக்கெடுப்பின் போது, முல்லைப் பெரியாறு அணை நீர்த்தேக்கத்தில் தண்ணீர் பருகிய யானைகள்.
தேக்கடி வனப்பகுதியில் கணக்கெடுப்பின் போது, முல்லைப் பெரியாறு அணை நீர்த்தேக்கத்தில் தண்ணீர் பருகிய யானைகள்.

தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயத்தில் புதன்கிழமை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. அதே போல் கொடைக்கானல் வனப் பகுதிகளிலும் 3 நாள்கள் இப்பணி நடைபெறுகிறது.

பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதிகளான தேக்கடி, பெரியார், வள்ளக்கடவு, அழுதை, பம்பை ரேஞ்சு உள்பட 925 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதியை, 5 முதல் 7 கிலோ மீட்டர் கொண்ட பல பிரிவுகளாக பிரித்து இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. ஒவ்வொரு பிளாக்கிலும் 5 வனத்துறையினர் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
முதல் நாளான புதன்கிழமை, ஒவ்வொரு பகுதியிலும் யானைகளை பார்த்த நேரம், இடம், எண்ணிக்கை, வயது, கொம்பன் யானை, பிடியானை என யானைகளின் அனைத்து விவரங்களையும் சேகரித்தனர். 2 ஆம் நாளான வியாழக்கிழமை யானைகளின் போக்குவரத்துப் பாதையில் சென்று யானைச்சாணம், கால் தடங்களை வைத்து விவரம் சேகரிக்கப்படும். 3 ஆம் நாளான வெள்ளிக்கிழமை யானைகள் தண்ணீர் குடிக்க வரும் நீர்நிலைப் பகுதிகளை கண்காணித்து அவற்றின் விவரம் சேகரிக்கப்படும். இந்த விவரங்கள் பெரியாறு புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையிடம் வழங்கப்படும்.
யானைகள் கணக்கெடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை இரவே தேக்கடி வனப்பகுதிக்கு சென்று தங்கினர். புதன்கிழமை காலையிலிருந்து யானைகள் கணக்கெடுப்பு பணிகளை அவர்கள் தொடங்கினர்.
இந்த கணக்கெடுப்பில் வனஉயிரின ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலருக்கு பயற்சி அளிக்கப்பட்டு, தற்போது, அவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கேரள வனத்துறையினர் தெரிவித்தனர். தேசிய அளவில் 5 ஆண்டுகளுக்குப் பின் இக்கணக்கெடுப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதிகளில் புதன்கிழமை காட்டுயானைகளை கணக்கெடுக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினர்.
கொடைக்கானல், பழனி, பேரிஜம், மன்னவனூர், பூம்பாறை, வந்தரேவு உள்ளிட்ட 6 ரேஞ்சுகளில் 14 பீட்டுகளில் இக்கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
இதில் கொடைக்கானல் வன உயிரின சரணாலயப் பகுதிகளில் 3 நாள்கள் இப்பணி நடைபெறுகிறது. முதல் நாளில் யானைகளின் எண்ணிக்கையும், 2 ஆவது நாள் நேர்கோடு எண்ணிக்கையும், 3 ஆவது நாள் நீர்குட்டைகளின் எண்ணிக்கையும் நடக்கிறது. இப்பணிகளில் கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com