அண்ணா பல்கலை.யில் திட்டமிட்டபடி இன்று பட்டமளிப்பு விழா: சான்றிதழ்களில் செயலர் கையொப்பம்

தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டபடி 37-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட உள்ளது.
அண்ணா பல்கலை.யில் திட்டமிட்டபடி இன்று பட்டமளிப்பு விழா: சான்றிதழ்களில் செயலர் கையொப்பம்

தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டபடி 37-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட உள்ளது.
மாணவர்களுக்கு அளிக்கப்படும் பட்டச் சான்றிதழ்களில் துணைவேந்தருக்குப் பதிலாக, உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். அத்துடன், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரின் கையெழுத்துகளும் இடம்பெற்றிருக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம் கடந்த 2016 மே 26-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பிறகு பல்கலைக்கழகத்துக்கு துமைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், துணைவேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேதியையும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதற்குப் பேராசிரியர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பட்டமளிப்பு விழாவுக்குத் தடை கோரி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பட்டமளிப்பு விழாவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் திட்டமிட்டபடி பட்டமளிப்பு விழாவை பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை நடத்துகிறது.
பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான வித்யாசாகர் ராவ் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செயலர் சுனில் பாலிவால், இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்கின்றனர்.
விழாவில் முதல் மதிப்பெண் பெற்று பத்தகம் வென்ற இளநிலை, முதுநிலை பட்ட மாணவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் நேரடியாக பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இவர்களுடன் மொத்தம் 1.20 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த விழா மூலம் பட்டம் பெறுகின்றனர்.
பட்டச் சான்றிதழில் செயலர் கையெழுத்து: துணைவேந்தர் இல்லாததால், 1.20 லட்சம் பட்டச் சான்றிதழ்களிலும் உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கையெழுத்து இடம்பெற்றிருக்கும்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஜி.வி.உமா கூறியது:
பட்டச் சான்றிதழ்களில் உயர் கல்வித் துறைச் செயலர் கையெழுத்திடுகிறார். அவர் பல்கலைக்கழகத்தை இப்போது நிர்வகித்து வரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும் இருக்கிறார். எனவே, மாணவர்களுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
அண்ணா பல்கலைக்கழக விதியில் பட்டச் சான்றிதழில் துணைவேந்தர்தான் கையெழுத்திடவேண்டும், செயலர் கையெழுத்திடக் கூடாது என எதுவும் இல்லை. எனவே, மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்றார்.

தடை கோரிய மனு தள்ளுபடி
துணை வேந்தர் இல்லாமல் நடைபெறவுள்ள அண்ணா பல்கலைகழகத்தின் 37-ஆவது பட்டமளிப்பு விழாவுக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் ஐ.அருள் அறம் சார்பில் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி எம்.கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக 37-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (மே 19) நடைபெறவுள்ளது. கடந்த மார்ச் 30-ஆம் தேதி நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் பல்கலைக்கழக பட்டமளிப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. எனவே, பட்டமளிப்பு விழாவை, துணைவேந்தர் இல்லாமல் நடத்த முடியாது. அவ்வாறு துணை வேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்துவது, பல்கலைக்கழக விதிகளுக்கு எதிரானது.
இது போன்று, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் வேறு ஒருவர் கையெழுத்திட்டு வழங்கிய பட்டத்தை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்துவிட்டன.
எனவே, துணைவேந்தரை விரைவாக நியமிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை, அண்ணா பல்கலைக்கழகத்தின் 37-ஆவது பட்டமளிப்பு விழா நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் ஐ.அருள் அறம் கோரியிருந்தார்.
சட்டத்தில் இடமில்லை: இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர், விடுமுறைக் கால நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் வியாழக்கிழமை பிறப்பித்த தீர்ப்பில், துணைவேந்தர் பதவியை பல்கலைக்கழக உறுப்பினர் ஒருவர்தான் வகிக்க முடியும் என்ற மனுதாரரின் வாதத்தை உறுதி செய்வதற்கு சட்டத்தில் இடம் ஏதுமில்லை.
முழு அதிகாரம் உள்ளதால்... பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவுக்கு நிர்வாகச் செயல்பாடுகளில் தலையிட முழு அதிகாரம் உள்ளது. குறிப்பாக, பல்கலைக்கழகத்தின் எந்த ஒரு அதிகாரியையும் வைத்து பட்டமளிப்பு விழா நடத்தவும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி, பட்டமளிப்பு விழாவுக்குத் தடை விதிக்க மறுத்ததோடு, அது தொடர்பான மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com