‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி: மு.க. ஸ்டாலின் கண்டனம்

வேலூரில் ‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருப்பதற்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி: மு.க. ஸ்டாலின் கண்டனம்

வேலூரில் ‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருப்பதற்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகில் உள்ள அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் ‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மதுக்கடைகளை எதிர்த்துப் போராடும் மகளிருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் போலீசாரின் வன்முறைகளை காணும்போது, தமிழக காவல்துறை தலைவர் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் அந்த இலாகா இருக்கின்றதா? குறைந்தபட்சம் முதல்வரின் கட்டுப்பாட்டிலாவது காவல்துறை இருக்கின்றதா என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறது. வேலூரில் மட்டுமல்ல, இதற்குமுன் திருப்பூர் மாவட்டத்திலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய தாய்மார்களின் மீது தடியடி நடத்தப்படுவதை நாகரிக சமுதாயத்தில் உள்ள எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
 
“தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்” என்று ஓட்டு வாங்குவதற்காக மக்களை ஏமாற்றிய அதிமுக அரசு, இன்றைக்கு மதுக்கடைகளை மூடுவதற்கு பதில் மகளிர் மீது தடியடி நடத்தி வருகிறது. கோயில்கள், மார்கெட்டுகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு துரும்பைக் கூட எடுத்துப் போடாத அதிமுக அரசு, தாய்மார்கள் தங்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ‘டாஸ்மாக்’ கடைகளை மூடக் கோரினால்கூட, அவர்கள் மீது தடியடி நடத்தி வருவது ஜனநாயக உணர்வுகளை சாகடிக்கும் முயற்சியாகவே தெரிகிறது. இது, ஜனநாயகரீதியிலான போராட்டங்களுக்கு மதிப்பளித்துத் தீர்வு காண அதிமுக அரசு தயாராக இல்லை என்ற மனப்போக்கை வெளிக்காட்டுகிறது.
 
போலீஸ் காவலில் இருக்கும் கைதிகள் மரணம், சிறைக்குள் நிகழும் திடீர் மரணங்கள், போலீசாரின் காவலில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் கொலை என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சந்தி சிரிக்கிறது. ஒரு முதலமைச்சர் குடியிருந்த ‘கொடநாடு எஸ்டேட்’ காவலாளியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானது மட்டுமல்ல, அந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் குற்றவாளிகளின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல், அடுத்தடுத்து நடக்கும் மர்ம விபத்துக்கள் போன்ற நிகழ்வுகள், ,திறமைமிக்க தமிழக காவல்துறை “மாலுமி” இல்லாத கப்பல் போல இன்றைக்கு தரைதட்டி நிற்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
 
இன்றைக்கு தமிழக காவல்துறையில் ஐ.ஜி., கூடுதல் டி.ஜி.பி., ஆகிய பதவிகளில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. திருச்சி, திருநெல்வேலி போன்ற முக்கிய பகுதிகளின் சரக டி.ஐ.ஜி. பதவிகளில் முழுநேர போலீஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்படவில்லை. தமிழக காவல்துறையின் உளவுத்துறை, சட்டம் - ஒழுங்கு, போலீஸ் சீருடை பணியாளர் வாரியம் உள்ளிட்ட மூன்று துறைகளுக்கு ஒருவரே ’டி.ஜி.பி’ பொறுப்பு வகிக்கும் நிலைமை ஏற்பட்டு இருப்பது உட்பட காவல்துறையில் இப்போது நடந்துவரும் பலவித நிர்வாக அலங்கோலங்கள், ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையாக விளங்கி வந்த தமிழக காவல்துறைக்கு சோதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
 
மூன்று டி.ஜி.பி. பதவிகளின் பணிகளை ஒரே ஒரு டி.ஜி.பி. கவனித்துக் கொள்வது, போலீஸ் சீர்திருத்தத்திற்கு வித்திட்ட “பிரகாஷ் சிங்” வழக்கில் சுட்டிக்காட்டப்பட சீர்திருத்தங்களை சுயநலனுக்காக அதிமுக அரசு பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டிய டி.ஜி.பி.களை ஓய்வுபெற்ற பிறகும் பணி நீட்டிப்பு கொடுத்தது, காலியிடங்கள் இருந்தும் டி.ஜி.பி. பதவி உயர்வு நிலுவையில் போடப்பட்டுள்ளது என்று ஆங்கிலப் பத்திரிக்கை சுட்டிக்காட்டியும் கூட, உரியவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்க முடியாமல் தவிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையின்மை என இவை எல்லாம், இன்றைக்கு தமிழக காவல்துறை நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப்போக வைத்திருக்கிறது. தமிழக காவல்துறையில் களத்தில் நின்று பிரச்னைகளை சந்திக்கும் இன்ஸ்பெக்டர்களுக்கும், டி.எஸ்.பி.களுக்கும் சரியான வழிகாட்டுதல் தரக்கூடிய, ’ஆளுமைமிக்க’ தலைமை இல்லாமல் தமிழக காவல்துறை தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதிமுக ஆட்சியில் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக காவல்துறை நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்து விட்டது.
 
அதனால், ஜனநாயகரீதியாக நடக்கும் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் கையாளுவதற்கு “தடியடி”, “144 தடையுத்தரவு” ஆகியவை மட்டுமே ஒரே வழி என்ற சிந்தனை, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் காவல்துறை அதிகாரிகள் மனதில் குடிகொண்டு இருப்பது வேதனையை எற்படுத்துகிறது. பெண்கள் மீது தடியடி நடத்துவது, அநாகரிகமாக அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்வது, கைகளைப் பிடித்து போலீஸ் வேனுக்கு இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள், மனித உரிமைகளுக்கு எதிரானவை என்பதைக் கூட சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த அதிமுக அரசு தயாராக இல்லை.
 
ஆகவே, மதுக்கடைகளுக்கு எதிரான மகளிர் போராட்டங்களில் மனித உரிமைகளுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் உட்பட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், தாய்மார்கள் மூடக்கோரும் டாஸ்மாக் கடைகளை எவ்வித மறுப்புமின்றி உடனடியாக மூட வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக் கொள்கிறேன். தமிழக காவல்துறையில் உள்ள காலியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பி, ஒரே நபர் பல பதவிகளை கவனிக்கும் முறையை மாற்றி, ஜனநாயக உணர்வுகளையும், மனித உரிமைகளையும் மதித்து செயல்படும் வகையில் தமிழக காவல்துறையை “பிரகாஷ் சிங்” வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ள உண்மையான நோக்கத்தினை பிரதிபலிக்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com