ரஜினிகாந்துக்கு அரசியல் தெரியாது: சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி!

நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய அரசியல் அமைப்பு பற்றி எதுவும் தெரியாது என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு அரசியல் தெரியாது: சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி!

புதுதில்லி: நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய அரசியல் அமைப்பு பற்றி எதுவும் தெரியாது என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஐந்து நாட்கள் தொடர்ந்து நடத்தினார். கோடம்பாக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில்  இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் தொடர்ந்து அரசியல் தொடர்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். அதிலும் குறிப்பாக ' அடுத்து நான் என்ன செய்வேன் என்பது கடவுள் கையில் இருக்கிறது என்றும், ‘நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை என் பக்கத்தில் சேர்க்க மாட்டேன்’ என்றெல்லாம் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இவையெல்லாம் அவர் தனது அரசியல் பிரவேசத்திற்கான முன்னோட்டமாக பேசுவதாக கூறப்பட்டது. 

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று, இறுதி நாளன்று அவர் பேசுகையில், ‘நாட்டில் சிஸ்டம் கெட்டுபோய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் இப்போது அவரவர் வேலையை பாருங்கள்.போர் என்று வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அறைகூவல் விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் கலவையான எதிர்வினைகளை உருவாக்கியது.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச எண்ணங்கள் குறித்து, பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஏற்றவர் கிடையாது. இந்திய அரசியலமைப்பு சட்டம், அது வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள்  பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் ஒரு நல்ல நடிகர். அவர் சினிமாவில் நடிப்பதே சாலச் சிறந்தது. தனது படங்களில் நல்ல நல்ல வசனங்களை பேசி அவர் மக்களை மகிழ்விக்கலாம்.

சினிமாவில் இருந்து அரசியலில் நுழையும் நட்சத்திரங்கள் தமிழகத்திற்கு காமராஜர் செய்ததை பாழாக்கி இருக்கிறார்கள். காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு போடப்பட்ட அடிப்படை கட்டமைப்பையும் அழித்து விட்டார்கள். எனவே சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com