கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவில் தேசிய - மாநில கட்சித் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்பு: மு.க. ஸ்டாலின் 

கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவில் பல்வேறு தேசிய - மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவில் தேசிய - மாநில கட்சித் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்பு: மு.க. ஸ்டாலின் 

கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவில் பல்வேறு தேசிய - மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அதில், தலைவர் கருணாநிதியின் 60 ஆண்டுகால சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சி மற்றும் 94 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஆகிய இரண்டையும் இணைத்து மாபெரும் விழாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் சார்பில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட இருக்கின்றது. ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் உள்ள திடலில் வரும் 3 ஆம் தேதியன்று மாலை 5 மணியளவில் அவ்விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேசிய அளவிலான பல தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்க இருக்கின்றார்கள்.
 
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியும், பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும், தேசிய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் – தலைவர் சரத்பவாரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத்தலைவர் டெரிக் ஒபராயனும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனும், புதுச்சேரி மாநில முதல்வர்  நாராயணசாமியும், இந்த விழாவில் பங்கேற்று தலைவர் கருணாநிதியை வாழ்த்தி உரையாற்ற இருக்கின்றார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன்.
 
கேள்வி: தலைவர் கலைஞரின் உடல் நிலை எப்படி இருக்கிறது, இந்த விழாவில் அவர் பங்கேற்பாரா?
 
பதில்: நான் ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன். இப்போதுள்ள சூழ்நிலையில் தலைவர் கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லை. ஒருவேளை மருத்துவர்கள் அனுமதித்தால் அவர் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதுதான் இப்போதுள்ள நிலை.
 
கேள்வி: அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய நிகழ்ச்சியாக வைரவிழா நடைபெறும் நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர் பற்றி ஏதேனும் பேசப்படுமா?
 
கேள்வி: அதற்காக நடைபெறும் விழாவல்ல இது. குடியரசுத்தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் அறிவிப்பது சோனியா காந்தி என்னிடம் தொலைபேசி மூலம் பேசியிருக்கிறார். அதேபோல மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் கலந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்த பிறகுதான் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து முடிவெடுக்கப்படும். இந்த விழா அதற்காக நடைபெறவில்லை. இது தலைவர் கருணாநிதியின் வைரவிழா மற்றும் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா என்பது தான் உண்மை.
 
கேள்வி: நீங்கள் பலமுறை வலியுறுத்திய பிறகு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை நடத்தப்படுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறதே?
 
பதில்: யார் அறிவித்திருப்பது? அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகாத நிலையில், செய்தியை வெளியிட்டு கேள்வி எழுப்புகிறீர்கள். நாங்கள் முறையாக கடிதம் கொடுத்திருக்கிறோம். சட்டப்பேரவையை கூட்ட வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். ஆனால், அங்கிருந்து முறையாக எந்தவித பதிலும் எங்களுக்கு வரவில்லை. அது வந்த பிறகு அதுபற்றி முடிவு செய்யப்படும்.
 
கேள்வி: மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த சட்டப்பேரவையை கூட்ட முன்வராதது ஏன்?
 
பதில்: சட்டப்பேரவையை கூட்டினால் மெஜாரிட்டி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்ச உணர்வு அவர்களுக்கு உள்ளது. அதனால் தான் போட்டிப்போட்டுக் கொண்டு சென்று பிரதமரை சந்திக்கும் நிலை இருக்கின்றது. எனவே, பேரவையை கூட்டத் தயங்குகிறார்கள் என்பதே எனது கருத்து.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com