வேளாண் விளைபொருள் இறக்குமதி ஆய்வுக் கட்டணம் பன்மடங்கு உயர்வு

வேளாண் விளைபொருள் இறக்குமதிக்கான ஆய்வுக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் பழங்கள் முதல் பருப்பு வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேளாண் விளைபொருள் இறக்குமதி ஆய்வுக் கட்டணம் பன்மடங்கு உயர்வு

வேளாண் விளைபொருள் இறக்குமதிக்கான ஆய்வுக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் பழங்கள் முதல் பருப்பு வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வேளாண் விளைபொருள் வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஆய்வுச் சான்று வழங்கும் தாவரப் பாதுகாப்புத் துறை: இவ்வாறு வேளாண் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து ஆய்வுச் சான்று அளிக்க வேண்டும். இந்தச் சான்றில் விளைபொருளின் பொதுவான தாவரவியல் பெயர், தரம், கிருமி, பூச்சி ஏதும் இல்லை, அளவு, காலம் உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த சட்டப்பூர்வமான சான்றிதழ் சுங்கத்துறையில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகே சரக்குகளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்ய முடியும்.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் இத்துறைக்கான தலைமை அலுவலகம் தில்லி அருகே உள்ள ஃபரிதாபாத் நகரில் உள்ளது. மேலும் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறும் அனைத்து இடங்களிலும் இத்துறையின் அலுவலங்கள் இயங்கி வருகின்றன.
கட்டணம் பல மடங்கு உயர்வு: இச்சான்றிதழ்களை வழங்கும் பணிக்காக பல்வேறு வகையான ஆய்வுக் கட்டணங்கள் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுகின்றன இந்நிலையில் மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் கடந்த மே 15 திங்கள்கிழமை வெளிடப்பட்ட அறிவிக்கையின்படி இக்கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக 20 டன் துவரை இறக்குமதிக்கான ஆய்வுக் கட்டணம் முதல் ஒரு டன்னுக்கு ரூ. 2500-ம் கூடுதல் டன் ஒன்றுக்கு ரூ.50-ம் மற்றும் வரிகள் உள்பட ரூ.4 ஆயிரம்வரை வசூலிக்கப்பட்டது. புதிய கட்டண விகிதத்தின்படி முதல் டன்னுக்கு ரூ.4000 எனவும், கூடுதல் டன் ஒன்றுக்கு ரூ.150 என வரிகள் உள்பட ரூ. 8 ஆயிரம் வரை கட்டணம் விதிக்கப்படுகிறது. இதேபோல் ஆப்பிள் உள்ளிட்ட பல வகைகள், மரக்கட்டைகளுக்கும் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே முறையில் 10 அல்லது 20 கன்டெய்னர்களில் வரும் இச்சரக்குகளை வெளியே எடுக்க புதிய கட்டண விகிதம் மூலம் லட்சக்கணக்கில் கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
விதைகளுக்கு 5 மடங்கு உயர்வு: மரம், செடி கொடிகளுக்கான விதைகள் இறக்குமதிக்கும் சான்றிதழ் அளிக்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற விதைகள் நெதர்லாந்து நாட்டிலிருந்து குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த வாரம் வரை இதற்கான ஆய்வுக் கட்டணம் ரூ. 14 ஆயிரம் வரை செலுத்தப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை வந்த ஒரு கன்டெய்னருக்கு ரூ. 72 ஆயிரம் செலுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
கட்டண உயர்வு மூலம் விலைவாசி உயரும்: இது குறித்து தமிழ் வர்த்தக சபை தலைவர் சோழநாச்சியார் ராஜசேகரன் கூறியது:
வேளாண் விளை பொருள்களை ஆய்வு செய்வது, தரச்சான்று அளிப்பது என்பதெல்லாம் அரசின் கடமை ஆகும். ஆனால் இக்கட்டணத்தை வைத்து வருவாய் ஈட்டும் விதமாக எவ்வித நியாயமும் இன்றி திடீரென ஆய்வுக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும் உயர்த்தப்பட்ட கட்டணங்களால் பருப்பு முதல் பழங்கள் வரை அனைத்தும் விலை உயரும். எனவே இக்கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார் ராஜசேகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com