“சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என்று மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்: ஸ்டாலின் எழுதும் மடல்

ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனை என்ற தலைப்பில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
“சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என்று மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்: ஸ்டாலின் எழுதும் மடல்

சென்னை: ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனை என்ற தலைப்பில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் அவல அதிமுக ஆட்சி பற்றிய மடல்.
 
அ.தி.மு.க.வினர் மீண்டும் பதவியேற்றுக் கொண்டு மே 22 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஒரு வருடத்தில் மூன்று முதலமைச்சர்கள். ஒரு மாற்றம் இயற்கையாக ஏற்பட்டது என்றாலும், இரு முதல்வர்கள் மாற்றம் ‘அதிகாரவெறி’ யால் ஏற்பட்ட மாற்றம். முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் இந்திய அளவில் கடைசி இடம் என்பதும், முன்னிலை பெற்றிருந்த துறைகளிலும் இமாலய ஊழல் என்பதுமே இந்த ஆட்சியின் வேதனைமிகுந்த சாதனையாக இருக்கிறது. இது இந்த ஓராண்டு காலத்தில் நிகழ்ந்ததல்ல, கடந்த 5 ஆண்டுகளிலும் இதே அவல நிலைதான்.
 
அதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழக அரசின் நேரடி கடன் சுமை 3 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இதுபோக, மின்துறை உள்ளிட்ட பிற துறைகளின் மறைமுக கடன் சுமைகளையும் சேர்த்தால் 5 லட்சம் கோடி என்கிற அளவிற்கு, தமிழ்நாடே திவாலாகும் நிலையில்தான் அரசாங்கத்தின் கஜானா காலியாகி உள்ளது. எவ்விதத் திறனுமற்ற நிர்வாகத்தின் இயல்பான விளைவுதான் இது என்பது எளிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது. மதுபான வருமானத்திற்காக எந்த அவமானத்தையும் ஏற்கும் மதிமயக்கமும் மனோபாவமும் கொண்ட அரசுதான் 6 ஆண்டுகாலமாக நம்மை ஆட்சி செய்து வருகிறது.
 
வாக்களித்த மக்களின் அடிப்படைத் தேவை உணவும் குடிநீரும்தான். அதைக்கூட உறுதி செய்ய முடியாத கையாலாகாத ஆட்சியை தமிழகம் சந்தித்துச் சகித்துக் கொண்டிருக்கிறது. பொதுவிநியோகத் திட்டம் என்றால் தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று தி.மு.கழக ஆட்சியின்போது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஆனால் இன்று அந்தத் திட்டம் சீரழிக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு வீட்டுக்கும் நாளொன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவோம் என்று 2011ல் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை இந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. ஆள்வோரின் அலட்சியப் போக்கினால், தமிழகம் முழுவதும் காலிக் குடங்களுடன் பெண்கள் ஆவேசத்துடன் வீதிக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடும் நிலையைக் காண்கிறோம். 
 
ஆற்று மணலில் தொடங்கி தாது மணல், சவுடு மணல், கிரானைட் உள்பட அனைத்து கனிமவளங்களும் தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்கொள்ளை அடிக்கப்படுவதை நீதிமன்றமே பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறது, அவற்றைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் இந்த ஆட்சியாளர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை. 
 
இயற்கை வளங்கள் கொள்ளை போனதால் விவசாயிகளின் வாழ்வு தரிசு நிலமாக மாறிவிட்டது. கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனம் வெதும்பி, தற்கொலையாலும் அதிர்ச்சி மரணங்களாலும் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களின் உயிரிழப்பை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் கூட கொச்சைப்படுத்திய இரக்கமற்ற ஆட்சியாளர்களால் தமிழ்நாடு ஹிட்லரிசத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறது. 
 
விவசாயிகள் மட்டுமல்ல, போக்குவரத்து தொழிலாளர்கள் தொடங்கி அனைத்துவகைத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர் என அனைத்துத் தரப்பினரின் வாழ்வுடனும் இந்த அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது தொழில் முதலீடுகள். ஆனால் 6 ஆண்டுகாலமாக தமிழகத்தின் தொழில்முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளன. வர விரும்பிய தொழிற்சாலைகள் வெளி மாநிலங்களுக்குத்  திரும்பி விட்டன. இருந்த தொழிற்சாலைகள் “விட்டால் போதும்” என்று வேகமாக வெளியேறி விட்டன.
 
கடந்த ஆறாண்டுகளாக தமிழகத்தில் வழிப்பறி தொடங்கி கொலை - கொள்ளை - பாலியல் குற்றங்கள் அதிகரித்தபடியே உள்ளன. குறிப்பாக, வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் - முதியோர் ஆகியோரின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. காவல்துறை என்பது மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில், குடியிருப்புப் பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து ஜனநாயக வழியில் போராடும் பெண்களையும் இளைஞர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி, கைது செய்யும் ஏவல்துறையாக மாறியுள்ளது. ஆறு வருடமாக மாலுமி இல்லாத கப்பலாக தமிழக காவல்துறை தரை தட்டி நிற்கிறது.
 
உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாத காரணத்தினால், அடிப்படைத் தேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. 
 
2011, 2016 ஆகிய இரு அதிமுக தேர்தல் அறிக்கைகளில் அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, இல்லத்தரசிகளுக்குக்  கைபேசி, நதிகள் இணைப்பு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை பெருக்குவது போன்ற ’வாக்குறுதிகள்’ இன்று அதிமுக ஆட்சியில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. 
 
அதனால்தான் வலிமைமிகுந்த எதிர்க்கட்சியான தி.மு.கழகம் களத்தில் இறங்கி மக்களின் துணையுடன் நீர்நிலைகளைப் பராமரித்தல், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்தல், அரசுப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் ஆய்வு செய்து விரைவுபடுத்துதல் என மக்களின் உற்ற நண்பனாகச் செயல்பட்டு வருகிறது. ஆளுங்கட்சி செய்ய மறந்ததை ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் செய்து வருகிறது.  
 
ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக ஓராண்டு கால சோதனை என்பதை அனுபவிக்கும் மக்கள் “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என்று இன்றைக்கு எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.  வேதனைகள் மிகுந்த இந்த ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும். ஆறு ஆண்டுகளாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் சூரியக் கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும். எம் மக்களுடன் இணைந்து நின்று தி.மு.கழகம் எத்திசையிலும் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com