சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் தாரை வார்க்கும் மத்திய அரசு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பராமரிப்பு பணிகளையும், காலியாக உள்ள நிலங்களையும் 45 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க  ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் தாரை வார்க்கும் மத்திய அரசு


சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பராமரிப்பு பணிகளையும், காலியாக உள்ள நிலங்களையும் 45 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க  ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மிக முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், நாட்டின் மிகப் பழமையான ரயில்நிலையங்களில் ஒன்றாகும். தினமும் சுமார் நூற்றுக்கணக்கான ரயில்களையும், 3 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளையும் சந்திக்கிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள முக்கிய பெரிய ரயில் நிலையங்களை, தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதில், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம், சென்னை சென்ட்ரல் நிலைய பராமரிப்புப் பணிகளையும், அதனை சுற்றியுள்ள 10 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல 45 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய நிறுவனத்திடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை குத்தகைக்கு விடுகிறது.

இந்த காலி இடத்தில் ஆஸ்திரேலிய தனியார் நிறுவனம் குடிநீர் மறுசுழற்சி, சோலார் மின் உற்பத்தி, கழிவு நீர் மேம்பாட்டு மையம், மழை நீர் சேமிப்பு, ஓய்வு அறைகள், வாகன நிறுத்துமிடம், மால்கள் என ரூ.350 கோடி செலவில் திட்டப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.

இந்த திட்டப் பணிகளுக்காக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட செலவிடாது. அனைத்தையும் ஆஸ்திரேலிய நிறுவனமே செய்துவிடும்.

இவ்வாறு ரயில்வே பணிகளை தனியார்மயமாக்குவது நாளடைவில் ரயில்வே துறையை தனியார் மயமாக்க வழிவகுக்கும் என்று ஏற்கனவே பல தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும், ஆஸ்திரேலிய நிறுவனம் இதனை சேவை மனப்பான்மையுடனா செயல்படுத்தப் போகிறது. மேம்பாட்டுப் பணிகளுக்காக செலவிடும் முழுத் தொகையை வட்டியும் முதலுமாக பயணிகளிடம் இருந்து திரும்பப் பெறவே செய்யும். இதனால், நடைமேடை அனுமதி கட்டணம் முதல் கழிவறைக் கட்டணம் வரை அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயரும் ஆபத்து உள்ளது. இதுபோன்று பொதுமக்களுக்கு நேரடியாக தொடர்புடைய முக்கியப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, மிக மோசமான முன்னுதாரணமாகவே இருக்கும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கருத்து.

நாட்டின் முக்கிய வளர்ச்சிப் பணிகளை எல்லாம் தனியாரிடமும், வெளிநாட்டினரிடமும் ஒப்படைத்துவிட்டு, அதனால் வரும் பின் விளைவுகளை மக்கள் மீது சுமத்துவதற்கு ஜனநாயக அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதும், வளர்ச்சிப் பணிகளுக்காக பொதுமக்கள் வரி செலுத்துவதும் எதற்காக என்பதுதான் விளங்காத கேள்வியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com