நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற தமிழக அரசு அக்கறை காட்டவில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு

மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து விலக்குப் பெற தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று திமுக முதன்மைச்

மதுரை: மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து விலக்குப் பெற தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.

திமுக சார்பில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கோரி மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:

மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் தான் மாநில அளவில் ஏற்கெனவே நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வை திமுக அரசு ரத்து செய்தது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் யார் வேண்டுமானாலும் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து விடமுடியாது.

அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரித்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. வட மாநிலங்களில் பொதுத் தேர்வு நடைமுறை தமிழகத்தில் இருப்பதைப் போல கடுமையான கண்காணிப்புக்குள் இருப்பதில்லை.

ஏற்கெனவே, தேர்வு நடத்தப்பட்டு முறையாக மாணவர் சேர்க்கை நடைபெறும்போது பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பதை திமுக வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு நீட் தேர்வைக் கொண்டு வந்தாலும், அதிலிருந்து விலக்குப் பெற அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளது என்பதை சட்டப்பேரவையில் திமுக சுட்டிக்காட்டியது. இதன் பிறகு, ஒருமித்த கருத்துடன் நீட் தேர்வுக்கான விலக்குக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இருப்பினும் தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரின் தொடர் நடவடிக்கை இல்லாததால் சட்டப்பேரவை தீர்மானம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கே செல்லாமல் போய்விட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் பிரதமரை நேரடியாகச் சந்தித்த நிலையிலும் நீட் தேர்வு பற்றி ஒருவர் கூட அவரது கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. நீட் தேர்வில் விலக்குப் பெற தமிழக அரசு உரிய அக்கறை செலுத்தவில்லை என்பதையே இதுகாட்டுகிறது.

 ஹிந்தியைத் திணித்தவர்கள் எழுச்சி பெற்றதாக வரலாறு கிடையாது. இனத்தை அழிப்பதற்கான ஆயுதமாக பாஜக இதை மேற்கொண்டு வருகிறது. இன்றைய இளைஞர்கள் இதை உணர்ந்து தமிழனாக வாழ உறுதியேற்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com