வங்கிகளில் சேவைக் கட்டண கெடுபிடி எதிரொலி: தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க மக்கள் ஆர்வம்

வங்கிகளின் சேவைக் கட்டணக் கெடுபிடிகள் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் தபால் சேமிப்பு கணக்கு தொடங்குவோர் எண்ணிக்கை மதுரைக் கோட்டத்தில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.
வங்கிகளில் சேவைக் கட்டண கெடுபிடி எதிரொலி: தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க மக்கள் ஆர்வம்

வங்கிகளின் சேவைக் கட்டணக் கெடுபிடிகள் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் தபால் சேமிப்பு கணக்கு தொடங்குவோர் எண்ணிக்கை மதுரைக் கோட்டத்தில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்கில் வாடிக்கையாளர்களுக்கான சேவைக் கட்டணங்களை பல வங்கிகள் உயர்த்தி வருகின்றன. குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, குறைந்தபட்ச இருப்பு தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைக் கட்டணம் ரூ.150 ஆகவும், ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்-மில் பணம் எடுத்தால் அதற்கு தனிச் சேவைக் கட்டணம் என தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. வங்கிகளின் இந்த புதிய விதிமுறைகளால் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்கள் வங்கிக் கணக்கை மூடும் முடிவுக்கு வந்துள்ளனர்.

அதே நேரம் தபால்துறையில் சேமிப்பு கணக்கு தொடங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், தபால் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.50 இருப்பு தொகையாக இருந்தால் போதும், ரூ.500 வைப்புத் தொகையாக இருந்தால் காசோலை வசதி கிடைக்கிறது. வைப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எந்த வித கட்டணம் இல்லாமல்
ஏடிஎம் அட்டையும் கொடுக்கிறார்கள். ஏடிஎம் கார்டுக்கு ஆண்டு சேவைக் கட்டணம் எதுவும் கிடையாது. மதுரையில் உள்ள நான்கு தலைமை தபால் நிலையங்களில் தபால் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பிற வங்கிகளின் ஏடிஎம் அட்டைகளையும் பயன்படுத்த முடியும்.

மேலும், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களும், முகவரி உறுதிச் சான்று நகல் இருந்தால் போதுமானது. ஒரு மணி நேரத்திற்குள்ளாக நமக்கான சேமிப்பு கணக்கு தொடங்கப்படும்.

இதுகுறித்து மதுரைக் கோட்ட தபால்துறை அதிகாரிகள் கூறியது:
 ஏடிஎம் அட்டை பயன்பாடு, பணப் பரிமாற்றம், செல்லிடப்பேசி குறுஞ்செய்தி சேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட கட்டணம் வங்கிகளில் வசூலிக்கப்படுகின்றன. இதே சேவையை தபால்துறை வழங்கினாலும் எந்த கட்டணமும் இல்லை. தபால் ஏடிஎம்களில் எங்கு வேண்டுமானாலும் எத்தனைமுறை வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்யலாம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டபோது வங்கிகள் விதித்த கெடுபிடிகளால் பலர் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகளைத் தொடங்கினர். இதேபோல வங்கிகளின் சேவைக் கட்டண கெடுபிடிகளாலும் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவோர் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.
 கடந்தாண்டு அக்டோபரில் மதுரைக் கோட்டத்தில் 13 ஆயிரமாக இருந்த சேமிப்பு கணக்குகள் எண்ணிக்கை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 27 ஆயிரமாக உயர்ந்தது. பின்னர் கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வங்கிகளின் சேவைக் கட்டணக் கெடுபிடிகள் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்தில் மட்டும் வங்கிக் கணக்குகளை நிரந்தரமாக மூடிய பலர் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகள் தொடங்கினர். இதன் காரணமாக மார்ச் மாதம் 51 ஆயிரத்து 904 சேமிப்பு கணக்குகளும், ஏப்ரல் மாதத்தில் 48 ஆயிரம் சேமிப்பு கணக்குகளும் மதுரைக் கோட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.

தபால்துறையில் சேமிப்பு கணக்கு தொடங்க மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதால் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. தபால் ஊழியர்களே குழுக்களாக, மார்க்கெட் பகுதி, மாநகராட்சி அலுவலகம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, தொழில் நிறுவனங்கள் என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு நேரடியாகவே சென்று, விண்ணப்பங்களை விநியோகித்து வருகின்றனர். இதனால் மக்கள் சேமிப்பு கணக்கு தொடங்குவது எளிதாகிறது. மக்கள் பயன்பாடு அதிகரிக்கும்பட்சத்தில் விரைவில் மதுரைக் கோட்டத்தில் கூடுதல் தபால் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படும்.விரைவில் அனைத்து தபால் ஊழியர்களுக்கும் டிஜிட்டல் கருவிகள் வழங்கும் திட்டம் உள்ளதாகவும், அதன் மூலம் நம் வீட்டில் இருந்தபடியே சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, போன்ற வசதிகளும் வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதேபோல சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தும்போது, சேமிப்பு கணக்கோடு சேர்த்து பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்ற விபத்து காப்பீட்டு திட்டமும் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்துகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் மாதம் ஒரு ரூபாய் வீதம் ஆண்டுக்கு ரூ.12 மட்டும் சேமிப்பு கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். சேமிப்பு கணக்கிற்கு ரூ.50 மற்றும் விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.12 என ரூ.62-க்கு சேமிப்பு கணக்குடன் கூடிய விபத்து காப்பீட்டையும் வழங்குகின்றனர்.

சேமிப்பு கணக்கின் வாடிக்கையாளர் விபத்தில் இறக்கும்பட்சத்தில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் காப்பீடு தொகையாக வழங்கப்படும். விபத்து மூலம் பகுதி ஊனமாகும் பட்சத்தில் ரூ.1 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com