தனியார் பாலில் ரசாயனம் கலப்பு: 4 நகரங்களில் ஆய்வு நடத்த அரசு குழுக்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

யார் பால் கெட்டுப் போகாமல் நீண்ட நாள்கள் பயன்படுத்த அதில் ரசாயனம் கலப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அந்தப் பாலை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக
தனியார் பாலில் ரசாயனம் கலப்பு: 4 நகரங்களில் ஆய்வு நடத்த அரசு குழுக்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தனியார் பால் கெட்டுப் போகாமல் நீண்ட நாள்கள் பயன்படுத்த அதில் ரசாயனம் கலப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அந்தப் பாலை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இது குறித்து, தலைமைச் செயலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாலில் ரசாயனம் கலந்து மக்களுக்கு
விற்பனை செய்வதாக தனியார் பால் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. மனுக்கள், தபால்கள், போன் மூலம் புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் அந்தந்த பால் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து மாதிரி எடுத்து சோதனை செய்கிறோம். குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அது பற்றி அறிவிக்கப்படும். தற்போது அந்த நிறுவனங்களின் பெயரைச் சொல்ல முடியாது.
ரகசிய குழுக்கள்: தனியார் பால் நிறுவனங்களே ஒருவரை ஒருவர் புகார் கூறுகின்றனர். பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்கள் இந்தத் தவறைச் செய்கின்றன. இதைக் கண்டுபிடிக்க சென்னை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் ரகசிய குழுக்கள் அமைத்துள்ளோம். துறை சார்ந்த ஊழியர்கள் அனைவரையும் முடுக்கியுள்ளோம்.
ஒரு வாரத்தில் அறிக்கை: இது பற்றிய அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், தவறு செய்த தனியார் பால் நிறுவனங்கள் மூடப்படும். அது மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தினர் மீது கிரிமினல் வழக்கும் தொடரப்படும்.
கெட்டால்தான் பால். தயிராகிவிட்டாலும் கூட அவர்கள் அதை ரசாயனம் மூலம் பாலாக்கி விற்பனை செய்கிறார்கள். பல நாட்கள் ஆகியும் அந்த நிறுவனங்களின் பால் கெடுவதில்லை. அப்படியானால் அது உண்மையான பால் இல்லை.
உண்மையான பால், கரந்து 5 மணி நேரத்தில் கெட்டுவிடும். அதற்குள் உறை ஊற்றினால் கெடாது. உண்மையான பழமும் குறிப்பிட்ட காலத்தில் கெட்டுவிடும். அப்படி கெடாவிட்டால் அது ரசாயனம் கலந்த பழமாகத்தான் இருக்கும். அது உடல் நலத்துக்கு கேடானது.
நிரூபிக்க முடியுமா? தனியார் நிறுவனங்கள் தவறு செய்யவில்லை என்றால், தங்கள் கம்பெனிக்கு சமூக ஆர்வலர்களை அழைத்துச் சென்று நிரூபிக்க முடியுமா? தனியார் பால் நிறுவனங்களின் பால் கிடைக்காவிட்டால் மக்கள் அனைவருக்கும் ஆவின் பால் நிறுவனம் மூலம் பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜேந்திர பாலாஜி.

"ஆரோக்யா பாலில் ரசாயனக் கலப்பு இல்லை'

ஆரோக்யா பாலில் எந்தவித ரசாயனங்களும் கலப்பது இல்லை என ஹட்சன் அக்ரோ பொருட்கள் நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அந் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஆர்.ஜி. சந்திரமோகன் கூறியதாவது:
தமிழகத்தில் தனியார் பால் விற்பனையில் ஆரோக்யா முதலிடத்தில் உள்ளது. அந்த நிறுவனத்துக்கு நூறு சதவீதம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு நிறுவனத்தின் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய உணவுப்பொருட்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (ஊநநஅஐ) தொடர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. ஆரோக்யா பாலில் எந்தவித ரசாயனங்களும் கலக்கப்படுவது இல்லை. பால் விற்பனைக்கு வருவதற்கு முன்னர் அரசின் சோதனைகள் உட்பட 42 வகையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறது.
தனியார் பால் குறித்த அமைச்சரின் கருத்துக்கு பதில் கூற விருப்பம் இல்லை. தமிழகத்தின் பால் தேவை நாளொன்றுக்கு 65 லட்சம் லிட்டர் ஆகும். ஆரோக்யா தற்போது 20 லட்சம் லிட்டரை கொள்முதல் செய்து வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com