மேட்டூர் அணை தூர்வாரும் பணி முதல்வர் தொடங்கி வைத்தார்

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன் முறையாக அணையைத் தூர்வாரும் பணியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.  உடன் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், வி.சரோஜா மற்றும் அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர்
மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், வி.சரோஜா மற்றும் அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர்

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன் முறையாக அணையைத் தூர்வாரும் பணியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே இந்த அணை 1925-ஆம் ஆண்டு தொடங்கி 1934-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப் பெரிய அணையான மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் ஆகிறது.
ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண் எடுக்க அனுமதி: தற்போது மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்நிலைகளைத் தூர்வாருதல் திட்டத்தின்படி மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை செயல்படுத்தும் விதமாக, மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியின் வலது கரைப் பகுதியில் அமைந்துள்ள மூலக்காடு, கொளத்தூர் மற்றும் பண்ணவாடி கிராமங்களிலும், மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியின் இடதுகரைப் பகுதியில் அமைந்துள்ள கூணான்டியூர் மற்றும் கோனூர் (மேற்கு) ஆகிய கிராமங்களிலும் முதற்கட்டமாக ஒரு லட்சம் கன மீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் கட்டணமின்றி எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதில் விவசாயத் தேவைக்கு வண்டல் மண் நன்செய் நிலத்துக்கு 1 ஏக்கருக்கு 75 கன மீட்டர் (25 டிராக்டர்), புன்செய் நிலத்துக்கு 1 ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர்) எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்குக் கூடுதலாக 60 கனமீட்டருக்கு மிகாமல் களிமண்ணையும், பொதுமக்கள் சொந்த பயன்பாட்டுக்காக 30 கனமீட்டருக்கு மிகாமல் வண்டல் மண், சவுடுமண், சரளைமண் ஆகியவற்றையும் கட்டணமில்லாமல் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
86,355 விவசாயிகள் பயன்: நீர்நிலைகளைத் தூர்வாருதல் திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தில் மொத்தம் உள்ள 42,115 நீர்நிலைகளில் 36,345 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 9,986 நீர்நிலைகளிலிருந்து 44,10,472 கனமீட்டர் வண்டல் மண் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சுமார் 86,355 விவசாயிகள் உள்ளிட்டோர் பயனடைந்துள்ளனர்.
அதன்படி, மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து முதல்வருக்கு விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும், மேட்டூர் அணை கரைப் பகுதியில் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வண்டல் மண் நிரப்பப்பட்டது.
பின்னர் விவசாயிகள் நிலங்களுக்கு டிராக்டர்கள் மூலம் வண்டல் மண் எடுத்து செல்லப்பட்டது.
இதன் மூலம் மேட்டூர் அணையின் கொள்ளளவு அதிகரிப்பதுடன், விவசாயத்துக்குத் தேவையான நீர்வளமும் அதிகரிக்கும். அணையில் 10 சதவீத அளவுக்கு கூடுதலாக நீரைத் தேக்கி வைக்க முடியும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா, எம்.பி.க்கள் வி.பன்னீர்செல்வம், காமராஜ், எம்எல்ஏ-க்கள் ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், முதன்மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் நிர்வாக ஆணையர் கொ. சத்யகோபால், முதன்மைத் தலைமைப் பொறியாளர் எம்.பக்தவத்சலம், மாவட்ட ஆட்சியர் வா.சம்பத், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், வி.சரோஜா மற்றும் அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com