மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகள் முடங்கக் காரணம் என்ன? அன்புமணி விளக்கம்

மேட்டூர் அணையை தூர் வாரும் பணியைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, அப்பணிக்காக ஒரு பைசா கூட இதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகள் முடங்கக் காரணம் என்ன? அன்புமணி விளக்கம்


சென்னை: மேட்டூர் அணையை தூர் வாரும் பணியைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, அப்பணிக்காக ஒரு பைசா கூட இதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக என்ற அறிவிப்புடன் தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகள் ஒரே நாளில் முடங்கிவிட்டன.  தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து திட்டத்தின்படி தொடங்கப்பட்ட தூர்வாரும் பணிகளுக்கும் இதேநிலை தான் ஏற்பட்டிருக்கிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

மேட்டூர் அணையில் தூர் வாரும் பணியை கடந்த 28-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சில வாரங்களில் அணை முழுவதும் தூர் வாரி முடிக்கப்படும்; அதனால் அணையின் கொள்ளளவு 10% வரை அதிகரிக்கும் என்றெல்லாம் முதலமைச்சர் வீரவசனம் பேசினார். ஆனால், ‘‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’’ என்பதைப் போன்று எடப்பாடி பழனிசாமியால் ஆடம்பரமாக தொடங்கி வைக்கப்பட்டத் திட்டம் 8 மணி நேரத்தில் முடங்கியிருக்கிறது.  அணையில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் தேவையான அளவுக்கு இலவசமாக அள்ளிச் செல்லலாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்ததால் வண்டல் மண்ணை  எடுத்துச் செல்வதற்காக மேட்டூர் வட்டாரத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் உழவர்கள் வந்திருந்தனர்.  முதலமைச்சர் முன்னிலையில் சில வாகனங்களுக்கு மட்டும் இலவசமாக மண் வழங்கிய அதிகாரிகள்,  முதலமைச்சர் அங்கிருந்து சென்ற பின்னர் ஒரு டிராக்டருக்கு ரூ.100 கட்டணம் செலுத்தினால் தான்  வண்டல் மண் வழங்க முடியும் என்று கூறிவிட்டனர். இதனால் உழவர்கள் மண் வாங்குவதற்கு மறுத்து வெளியேறிவிட்ட நிலையில், மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

மேட்டூர் அணையை தூர்வாரும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பகட்டாக அறிவித்தாலும், அதற்காக ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட   எந்திரங்களுக்குக் கூட வாடகை தர பணம் இல்லாத நிலையில், வண்டல் மண் எடுத்துச் செல்லும்  உழவர்களிடமிருந்து டிராக்டருக்கு ரூ.100 வீதம் வசூலித்து நிலைமையை சமாளிக்க அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதற்கு உழவர்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில் தான் தூர்வாரும் பணி முடங்கிக் கிடக்கிறது. மேட்டூர் அணை போன்ற மிகப்பெரிய நீர்நிலைகளை முறையாக திட்டமிட்டு தூர்வாருவது தான் சரியாக இருக்கும். ஆனால், விளம்பரத்திற்காக தூர்வாரும் திட்டத்தை அறிவித்து விட்டு, அதற்கு நிதியை ஒதுக்காதது தான் இப்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கெல்லாம் காரணமாகும்.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பராமரித்து, மேலாண்மை செய்வதற்கு தமிழக அரசிடம் தெளிவான கொள்கையோ, செயல்திட்டமோ இல்லை. அதனால் தான் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் சீரழிந்து வருகின்றன. வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகளை தமிழக அரசு தொடங்கியிருப்பதில் இருந்தே இவ்விஷயத்தில் தமிழக அரசுக்கு தெளிவானக் கொள்கை இல்லை என்பதை உணர முடியும்.

பசுமைத்தாயகம் அமைப்பின் நிறுவனரான ராமதாஸ் தலைமையில்,  பசுமைத் தாயகத்தின் தலைவராக இருந்த நானும், மக்களும் இணைந்து  தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை அந்தந்தப் பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் தூர் வாரினோம். நீர்நிலை மேலாண்மையில் பாட்டாளி மக்கள் கட்சி வகுத்துக் கொடுத்த வழியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் செயல்பட்டு வருகிறார்.   மிஷன் காகதீயா என்ற பெயரில் அவர் செயல்படுத்தி வரும் திட்டத்தின்படி 45,000 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி  செலவிடப்படவுள்ளது. 

 ஆனால், தமிழகத்தில் பா.ம.கவின் தொடர் வலியுறுத்தல்கள் காரணமாகவே கடந்த மார்ச் மாதத்தில் குடிமராமத்துத் திட்டத்தை அரசு அறிவித்தது. 1519 நீர்நிலைகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தூர்வாரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதிகாரப்பூர்வமற்ற வகையில் தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் என்ற பெயரில்  வண்டல் மண் கொள்ளை நடைபெற்று வருகிறது. ஒரு லாரி வண்டல் மண்ணுக்கு ரூ.1500 வீதம் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கையூட்டு வாங்கிக் கொண்டு மணல் கொள்ளையை தாராளமாக அனுமதிக்கின்றனர்.  

ஒவ்வொரு நீர்நிலையையும் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களைக் கொண்டு ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தூர்வாரும் வகையில் புதிய நீர்நிலை மேலாண்மைத் திட்டத்தை தமிழக அரசு  உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நீர்நிலைக்கும் அப்பகுதி விவசாயி ஒருவர் தலைமையில் மேலாண்மைக் குழு அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் சுழலுக்கு ஏற்ப அங்குள்ள நீர்நிலைகளை தூர்வாரிக் கொள்ளும் அதிகாரத்தையும், நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை உழவர்களுக்கு பகிர்ந்து வழங்கும் அதிகாரத்தையும் அக்குழுக்களுக்கு வழங்குவது நீர்நிலை மேலாண்மை திட்டத்தின் முக்கிய அம்சமாக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com