நீர்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை : வேகமாக உயர்ந்து வரும் அணைகளின் நீர்மட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.
மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி பாயும் வெள்ளம்.
மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி பாயும் வெள்ளம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதுகாப்பு வளையம், தடுப்புச் சுவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டதை அடுத்து அங்கு வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த பெய்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதியிலும், மாவட்டத்தின் பிற பகுதியிலும் சனிக்கிழமை மாலை தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை காலை வரை நீடித்தது. 
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): அதிகபட்சமாக பாபநாசம் அணை-142, பாபநாசம் கீழ் அணை-97, சேர்வலாறு அணை-84, மணிமுத்தாறு அணை-124.2, கடனாநதி அணை-10, ராமநதி அணை-25, கருப்பாநதி அணை-18, குண்டாறு அணை-52, வடக்குப்பச்சையாறு அணை-15, நம்பியாறு அணை-52, கொடுமுடியாறு அணை-130, கன்னடியன் அணைக்கட்டு-57. 
பிற பகுதியில்...: பாளையங்கோட்டை-10.2, திருநெல்வேலி-7.2, நான்குனேரி-90, ராதாபுரம்-49, சேரன்மகாதேவி-59.2, அம்பாசமுத்திரம்-68, ஆலங்குளம்-80.4, தென்காசி-35.4, செங்கோட்டை-47, ஆய்க்குடி-46.2.
9 ஆயிரம் கனஅடி நீர்வரத்து: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3475.19 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 450 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 5386 கனஅடி, கடனாநதி அணைக்கு 441 கனஅடி, ராமநதி அணைக்கு 90 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 81 கனஅடி, குண்டாறு அணைக்கு 17 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 90 கனஅடி நீர்வரத்து இருந்தது.
முதல் முறையாக வடக்குப் பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 114 கனஅடி நீர்வரத்து இருந்தது. நம்பியாறு அணைக்கு விநாடிக்கு 234.05 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 628 கனஅடி நீர்வரத்து இருந்தது.
மாலை 4 மணி நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 87.10 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்து 102.72 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 13 அடி உயர்ந்து 69.30 அடியாகவும் இருந்தது.
இதேபோல, கடனாநதி அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 67 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 61.35 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 61.25 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 100.25 அடியாகவும், வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 6.75 அடி உயர்ந்து 10 அடியாகவும் உள்ளது.
2 அணைகள் நிரம்பின: 22.96 அடி கொள்ளளவு கொண்ட நம்பியாறு அணையும், 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையும் நிரம்பின. வடகிழக்குப் பருவமழைக்கு இவ்விரு அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. சேர்வலாறு, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது.
பாசனத்துக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 444.75 கனஅடி, கடனாநதி அணையில் 100 கனஅடி, ராமநதி அணையில் 35 கனஅடி, கருப்பாநதி அணையில் 15 கனஅடி, அடவிநயினார் அணையில் 70 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. கொடுமுடியாறு அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 535 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளம்
மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமை நள்ளிரவு கடும் வெள்ளம் ஏற்பட்டது. அருவியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி பாய்ந்த வெள்ளத்தால் அருவியும், தடாகமும் ஒன்றாக காட்சியளித்தது. ஞாயிற்றுக்கிழமை காலை அருவிக்கு நீர்வரத்து சற்று குறைந்து காணப்பட்டது.
திடீர் வெள்ளத்தால் பாதுகாப்பு வளையம், தடுப்புச் சுவர் மற்றும் கம்பிகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, அருவியில் வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
681.40 மி.மீ மழை: ஒரே நாளில் திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும், பிற பகுதியிலும் சராசரியாக அதிகபட்சமாக 681.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து இம்மாவட்டத்திலுள்ள 11 அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருவது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com