கிரானைட் முறைகேடு: அரசுக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக 5 நிறுவனங்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்

மதுரை ஒத்தக்கடை அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ. 700 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக, பி.ஆர்.பி. கிரானைட் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் மீது மேலூர் நீதித்துறை

மதுரை ஒத்தக்கடை அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ. 700 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக, பி.ஆர்.பி. கிரானைட் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, முன்னாள் ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. அந்த ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு தனிப்படை போலீஸாரை நியமித்து கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 2 லட்சம் கிரானைட் கற்களை அரசு கையகப்படுத்த அனுமதி கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் 178 வழக்குகளையும், கிரானைட் முறைகேடு தொடர்பாக போலீஸார் 98 வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர்.
ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடையபட்டி கிராமம் சூரியனேந்தல்குளம், கல்லங்குத்துப்பாறை புறம்போக்கிலும் அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தனிப்படை காவல் ஆய்வாளர் பி.என். ராஜாசிங் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, கோரமண்டல் ஏஜென்ஸி, ஆர். வீரமணி, ஜி. கோபாலகிருஷ்ணன், பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ், பி. பழனிச்சாமியின் நிறுவனங்கள் மற்றும் 34 பேர் மீது ரூ. 699.96 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக 1719 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.
கிரானைட் முறைகேடுகளுக்கான சிறப்பு வழக்குரைஞர் ஷீலா மற்றும் போலீஸார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதுவரை கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக 77 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகளை போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். 
மாஜிஸ்திரேட் இன்றி விசாரணை பாதிப்பு: மேலூர் நீதித்துறை நடுவர்மன்ற மாஜிஸ்திரேட் பணியிடம் கடந்த மே மாதம் முதல் காலியாக உள்ளது. நிரந்தரமாக மாஜிஸ்திரேட் நியமனம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிரானைட் முறைகேடு வழக்குகளில் விசாரணை தடைப்படுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com