மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு; பயணிகள் குளிக்கத் தடை!: தடுப்புச்சுவர், கம்பிகள் சேதம்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் திங்கள்கிழமை நீர்வரத்து அதிகரித்தது.
வெள்ளத்தில் சேதமடைந்த மணிமுத்தாறு அருவியின் நடைபாதை.
வெள்ளத்தில் சேதமடைந்த மணிமுத்தாறு அருவியின் நடைபாதை.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் திங்கள்கிழமை நீர்வரத்து அதிகரித்தது. அருவி பகுதியில் இருந்த தடுப்புச் சுவர், கம்பிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிடும்படியாக மழைப் பொழிவு இல்லாததால், அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து காணப்பட்டது. நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த தொடர் மழையால் மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும், மணிமுத்தாறு மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த 4 நாள்களாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து, அருவியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பி, நடைபாதை, தடுப்புச் சுவர் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. பெண்கள் உடை மாற்றும் அறையின் கதவும் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அணையில் பாதுகாப்பாக குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, முண்டந்துறை புலிகள் சரணாலய அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் ஜெயராஜ் உத்தரவின் பேரில், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டதோடு, அருவிப் பகுதிக்குச் செல்ல முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அதிக நீர்வரத்தால், பாதுகாப்பாக குளிக்க முடியாத அளவுக்கு அருவிப் பகுதி சேதமடைந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்வரை, அருவியில் குளிக்க பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே, சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு குளிப்பதற்காக வருவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், 'அருவிப் பகுதியில் தடுப்புக் கம்பிகள், சுவர் மற்றும் தளம் உள்ளிட்டவற்றை நல்ல முறையில் அமைக்க வேண்டும். அருவிக்குச் செல்ல வனத்துறை சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நிலையில், சாலையை முறையாகப் பராமரிப்பதோடு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com