தனித்தன்மை வாய்ந்தது தமிழ் மொழி: விஐடி வேந்தர்

மற்ற மொழிகளைக் காட்டிலும் தனித்தன்மை வாய்ந்தது தமிழ் மொழி என விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் குறிப்பிட்டார்.
கவிஞர் தேவதேவனுக்கு கவிக்கோ விருது வழங்கிய விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன். உடன், கவிக்கோ அறக்கட்டளை துணைத் தலைவர் தி.மு.அப்துல்காதர், முத்தமிழ்ச் சுவைச்சுற்றம் நிறுவனர் புலவர் வே.பதுமனார்
கவிஞர் தேவதேவனுக்கு கவிக்கோ விருது வழங்கிய விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன். உடன், கவிக்கோ அறக்கட்டளை துணைத் தலைவர் தி.மு.அப்துல்காதர், முத்தமிழ்ச் சுவைச்சுற்றம் நிறுவனர் புலவர் வே.பதுமனார்

மற்ற மொழிகளைக் காட்டிலும் தனித்தன்மை வாய்ந்தது தமிழ் மொழி என விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் குறிப்பிட்டார்.
கவிக்கோ அறக்கட்டளை மற்றும் வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் 2016-ஆம் ஆண்டுக்காக கவிக்கோ விருது வழங்கும் விழா சோலை அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, கவிக்கோ அறக்கட்டளைப் பொருளாளர் வெ.சோலைநாதன் தலைமை வகித்தார். வேலூர் தமிழ்ச் சங்கச் செயலாளர் மு.சுகுமார் வரவேற்றார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த கவிஞர் தேவதேவனுக்கு ரூ. 1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய கவிக்கோ விருதை வழங்கி விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
கவிக்கோ அப்துல் ரகுமான் மதுரை மாவட்டம் அளித்த கொடையாகும். தமிழ்ச் சமுதாயத்துக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தித் தந்தவர் பெரியார். தமிழகத்தில் தமிழ் இயக்கம் தொடங்குவதற்கான முயற்சி வேலூரில் இருந்து தொடங்கப்பட்டது. சுவாமி வேதாசலம் எனும் இயற்பெயரைக் கொண்ட மறைமலை அடிகளாரால் கடந்த 1916-ஆம் ஆண்டு தனித் தமிழ் இயக்கம் கொண்டு வரப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. 
குழந்தைகளுக்கு வடமொழியில் பெயர் வைப்பது, ஆங்கிலம் கலந்து பேசுவது என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. நல்ல தமிழ் கேட்க வேண்டுமெனில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஒன்றும் செய்யவில்லை.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் தமிழர்கள் ஒரு கோடி பேருக்கு மேல் வசிக்கின்றனர். அமெரிக்க தமிழ்ச் சங்கம் தமிழ் வகுப்பு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் தமிழைப் படிக்க ஆர்வமாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் தமிழுக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தர வேண்டும். 
முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டதோடு, தமிழ் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, பெயரளவுக்குத் தான் அது இருக்கிறது. தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்க்க தமிழ் அமைப்புகள் முன்னின்று உழைக்க வேண்டும். அதேபோல, பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். 
உலகம் முழுவதிலும் உள்ள 6,900 மொழிகளில் ஒன்றாக தமிழ் இல்லை. முதன்மையாக உள்ள மொழி தமிழ். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் பெருமைகளை எடுத்துக் கூற வேண்டும்.
திருக்குறளை இலத்தீன் மொழியில் வீரமாமுனிவர் மொழி பெயர்த்தார். மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழ் மொழியானது தனித்தன்மை வாய்ந்தது. தமிழ் மொழிக்காக யார் பணியாற்றினாலும் அவர்களை மறந்து விடக் கூடாது. இதுபோன்ற விருது வழங்கிப் பாராட்ட வேண்டும். கவிஞர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த கருவூலங்கள். அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் கவிஞர் அபி, கவிக்கோ அறக்கட்டளை துணைத் தலைவர் தி.மு.அப்துல்காதர், செயலாளர் அ.அயாஸ் பாஷா, முத்தமிழ்ச் சுவைச்சுற்றம் நிறுவனர் புலவர் வே.பதுமனார், கவிக்கோ அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.எஸ்.ஷாஜஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
கவிஞர் தேவதேவன் ஏற்புரையாற்றினார். பேராசிரியர் த.அன்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com