ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றுங்கள்: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

ஆற்றங்கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்
ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றுங்கள்: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

ஆற்றங்கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து உடனுக்குடன் அரசுக்குத் தகவல் தெரிவித்து அவற்றை அப்போதே அப்புறப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
 தமிழகத்தில் பருவமழை பாதிப்பின் போது பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கி வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக சென்னையின் புறநகர்ப் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் விரிவாக்கப் பகுதிகள் மழை, வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. இவற்றுக்கு முக்கியக் காரணமாக கருதப்படுவது மழை நீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படாததே ஆகும். மேலும், ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளும் மழை நீரை வடிய விடாமல் செய்கின்றன.
 வடிகால்கள் வசதிகள்: பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கோவளம் மற்றும் கொசஸ்தலை ஆறு ஆகியவற்றில் வடிகால் வசதிக்கான முதல் கட்டத் திட்டம் வடிவமைக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து வருவாய்த் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:-சென்னை நகரைப் பொருத்தவரை இரண்டு முக்கிய நதிகள் மழை நீர் வடிகாலுக்கு முக்கியமானதாக இருக்கின்றன. அடையாறு, கூவம் ஆகிய இந்த இரு ஆறுகளிலும் இதுவரை நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அடையாறு ஆற்றங்கரையோரப் பகுதிகளில் மட்டும் 4 ஆயிரத்து 182 ஆக்கிரமிப்புகளும், கூவம் ஆற்றுப் பகுதியில் 825 ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.
 எப்போதும் தயார் நிலை: வடகிழக்கு பருவமழை காரணமாக மீண்டும் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தனியார் வானிலை ஆய்வர்களும் இப்போது வானிலை குறித்த தகவல்களை வெளியிடுகிறார்கள்.
 சுனாமி பாதிப்பு போன்ற விவரங்களைக் கூறுகிறார்கள். ஆனால், அவற்றை தமிழக அரசு நம்பத்தகுந்த தகவல்களாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்திய வானிலை ஆய்வு மையம் தரும் தகவல்களையே முன்னெச்சரிக்கை அறிவிப்பாக எடுத்துக் கொள்வோம். எனவே, இதுவரை சுனாமி போன்ற அச்சுறுத்தல்கள் ஏதும் நமக்கு வழங்கப்படவில்லை என்பதால் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
 தலைமைச் செயலாளர் உத்தரவு: மழை பாதிப்பு தொடர்பாக, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் வியாழக்கிழமை (நவ.9) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருவாய், நெடுஞ்சாலை, பொதுப்பணி உள்பட முக்கியத் துறைகளின் செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் குறித்தே முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
 சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட மழை-வெள்ளத்தால் பாதிக்கப்படும் அனைத்து மாவட்டங்களிலும் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை எந்தவிதத் தயவும் காட்டாமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டுள்ளார்.
 ஆக்கிரமிப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்களும் மாவட்ட வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்புகள் முழுமையாக முடிக்கப்பட்டு அவை அகற்றப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com