ஊடுகதிர் துருவமாதலை அளவிட்ட இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் !

அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளில் உள்ள படக்கருவி "கிராப் பல்சார்' நட்சத்திரத்திலிருந்து எக்ஸ்ரே கதிர்களின் மாற்றத்தை முதன்முறையாக அளவிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஊடுகதிர் துருவமாதலை அளவிட்ட இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் !

அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளில் உள்ள படக்கருவி "கிராப் பல்சார்' நட்சத்திரத்திலிருந்து எக்ஸ்ரே கதிர்களின் மாற்றத்தை முதன்முறையாக அளவிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வானியல் ஆராய்ச்சிக்கான அஸ்ட்ரோசாட் செயற்கைகோள் முதன்முறையாக பி.எஸ்.எல்.வி -சி30 ராக்கெட் மூலம் 2015-ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது விண்ணில் உள்ள புற ஊதா கதிர்கள், குறைந்த, அதிக ஆற்றல் வாய்ந்த எக்ஸ்ரே கதிர்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு அலைவரிசைகளில் ஆய்வு செய்யக்கூடியது.
இவ்வகை செயற்கைக்கோள்களை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விண்ணில் செலுத்தி ஆய்வு செய்து வருகின்றன. அஸ்ட்ரோசாட் செயற்கைகோளை அனுப்பியதன் மூலம் இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இதுவரை மற்ற நாடுகள் அனுப்பியுள்ள வானியல் ஆய்வுக்கான செயற்கைக்கோள்கள் குறைந்த அலைவரிசைகளை மட்டுமே ஆய்வு செய்யும் திறன் கொண்டவை. ஆனால், இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் குறைந்த, அதிக ஆற்றல் கொண்ட அலைவரிசைகளை ஆய்வு செய்யும் திறன் கொண்டது என்பது மற்றொரு சிறப்பு.
அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் மொத்த எடை 1,513 கிலோ. இதன் ஆயுள் 5 ஆண்டுகள். பூமியிலிருந்து 650 கி.மீட்டர் உயரத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள் நிலைக் கொண்டுள்ளது.
மிகக் கடினமான பணி: இந்தியாவின் பல அலைநீளங்கள் கொண்ட விண்வெளி தொலைநோக்கியான அஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் எக்ஸ்ரே கதிரை அளக்கும் மிகக் கடினமானப் பணியை வெற்றிகரமாக செய்துள்ளது.
ரிஷப நட்சத்திரத் தொகுப்பில் உள்ள கிராப் பல்சாரை 18 மாத காலம் ஆய்வு செய்த குழுவினர், தங்களின் கண்டுப்பிடிப்புகளை "நேச்சர் அஸ்ட்ரானமி' பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
நொடிக்கு 30 முறை சுழலும் உயர்காந்த சக்தி கொண்ட இந்த விண்பொருளின் துருவமாதல் மாற்றங்களை குழுவினர் அளவிட்டனர். பல்சர் நட்சத்திரத்தில் இருந்து வெளியாகும் உயர்சக்தி ஊடுகதிர் தொடர்பான இப்போதையக் கொள்கைகளுக்கு இந்த முக்கியமான அளவீட்டுக் கண்டுபிடிப்பு பெரிய சவாலை விடுத்துள்ளது.
அனுமானிக்க முடியாத பொருள்கள்: பூமியின் சூழலைக் கடந்த மிகவும் மாறுபட்டவையாக நியூட்ரான் நட்சத்திரங்கள், கருந்துளைகள் உள்ளிட்டவை உள்ளன. இவற்றை முழுமையாக ஆராய்ந்தால்தான் கொள்கை அடிப்படையிலான அனுமானங்கள் உண்மையா என்பதை உறுதி செய்ய முடியும்.
அத்துடன், இவை 10 அல்லது 20 கி. மீட்டர் விட்டத்தைக் காட்டிலும் குறைவான அளவு கொண்டவையாக இருந்தாலும், சூரியனின் எடையைக் காட்டிலும் பல மடங்கு அதிக அடர்வு கொண்டவை என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிக அடர்வு கொண்ட கோள்கள், பூமியை விட பல லட்சம் கோடி அளவுக்கு ஈர்ப்புவிசை, காந்தசக்தி கொண்டவை. வலுவான ஊடுகதிரியக்கம், ஒளியைப் போன்ற மின்காந்த அலைகள் ஆகியவற்றின் உற்பத்தி இடங்களாகவும் இவை உள்ளன. இச்சக்தியின் மூலம் அவற்றை புரிந்து கொள்வதற்கான தடயங்கள் கிடைக்கும். மேலும் அவற்றின் கதிரியக்கங்களுக்கு காரணமான இயற்பியல் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியும்.
சி.இசட்.டி. படக்கருவி: ஊடுகதிர் துருவமாதல் அளவுகளை காண பிக்சல்கள் கொண்ட சி.இசட்.டி. படக் கருவிகளைப் பயன்படுத்தும் நடைமுறை சில காலமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், விண்ணில் செலுத்தப்படுவதற்கு முன்னதாக, இதைப் பயன்படுத்தி, பின்னர் விண்வெளியிலும் பயன்படுத்துவது இதுவே முதன்முறை.
இதுகுறித்து சி.இசட்.டி. (CZT) படக் கருவியின் முதன்மை ஆய்வாளர் ஏ. ஆர். ராவ் கூறியது: விண்வெளியில் உள்ள மிகப் பிரகாசமான கோள்கள் கூட மிகக் குறைவான ஊடுகதிர் ஃபோட்டான்களையே வெளியிடுகின்றன.
கிராப் பல்சாரை நாங்கள் பலமுறை உற்றுநோக்க வேண்டியிருந்தது. மேலும் பல்வேறு மாதங்களில் பெற்ற தகவல்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. பல்சரின் சுழல்காலம் மிகக் குறுகியதாக இருக்கும் நிலையில் இத்தகைய ஒருங்கிணைப்பு பெரிய சவால்.
இவ்வாறு தகவல்களை ஒருங்கிணைக்கத் தேவைப்படும் குறும நொடி அளவிலானத் துல்லியத் தன்மையைப் பெறுவதற்காக உலகின் மிகச் சிறந்த ரேடியோ தொலைநோக்கி ஒன்றின் உதவியை அஸ்ட்ரோசாட் குழுவினர் நாடினர்.
புணே நகருக்கு அருகே கோடாட் என்ற இடத்தில் உள்ள இந்தியாவின் மிகப் பெரிய மீட்டர் அலைநீள தொலைநோக்கியின் உதவிப் பெறப்பட்டது. ஊட்டியில் உள்ள ரேடியோ தொலைநோக்கிக் கண்காணிப்புத் தகவல்களில் உள்ள குறைபாடுகளைக் களைந்து துல்லியமான அளவுகளை வழங்கியது. பின்னர் முழுக் குழுவினரும் இந்தத் தகவல்களை பல மாத காலங்களாக நுணுக்கமாக ஆராய்ந்தனர். இதையடுத்து உலகிலேயே மிகச் சிறந்த கிராப் ஊடுகதிருக்கான அளவீடுகளை அறிவித்தனர் ஏ.ஆர்.ராவ்.
சி.இசட்.டி என்றால் என்ன?
கேட்மியம் துத்தநாக தெலூரைடு (Cadmium zinc telluride) என்பதன் சுருக்கமே சி.இசட்.டி (CZT) மூலக்கூற்றுகள் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இச்சேர்மம் கேட்மியம், துத்தநாகம், தெலூரியம் ஆகியன சேர்ந்த ஒரு உலோகக் கலவை. இந்த உலோகக் படக் கருவி கதிர்வீச்சு, ஒளிவிலகல், மின் ஒளியியல் பண்பேற்றிகள், சூரிய மின்கலங்கள் உள்ளிட்ட பலவகையான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. கதிர்வீச்சைக் கண்டறியும் பயன்பாடுகளுக்கு ஏற்ப வெவ்வேறான வடிவங்களில் கேட்மியம் துத்தநாக தெலூரைடு கலவையைப் பயன்படுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com