கோவை, கொடநாடு எஸ்டேட்டில் அதிகாரிகள் விசாரணை

கோவையில் தொழிலதிபர் ஓ. ஆறுமுகசாமி, மர வியாபாரி சஜீவனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் 2 -ஆவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
கோவை, கொடநாடு எஸ்டேட்டில் அதிகாரிகள் விசாரணை

கோவையில் தொழிலதிபர் ஓ. ஆறுமுகசாமி, மர வியாபாரி சஜீவனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் 2 -ஆவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
 மணல் ஒப்பந்ததாரர் ஓ.ஆறுமுகசாமியின் கோவை ராம் நகரில் உள்ள செந்தில் குழுமத் தலைமை அலுவலகத்தில் 7 அதிகாரிகளும், ரேஸ்கோர்ஸில் உள்ள அவரது வீட்டில் 4 அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதேபோன்று மர வியாபாரி சஜீவனின் போத்தனூர் லாயர்ஸ் காலனி வீட்டில் 4 அதிகாரிகளும், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது பர்னிச்சர் கடையில் 2 அதிகாரிகளும், போத்தனூரில் உள்ள பர்னிச்சர் கிடங்கில் 3 அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.
 மேலும்,, சௌரிபாளையத்தில் உள்ள ஆறுமுகசாமியின் நண்பரான பழனிசாமியின் வீட்டிலும், அவிநாசி சாலையில் உள்ள செந்தில் டவர்ஸ் வணிக வளாகத்திலும் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்றது.
 இதில், 5 இடங்களில் நடைபெற்ற சோதனை வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணி அளவில் முடிவடைந்தது. மேலும், போத்தனூரில் உள்ள சஜீவனின் வீடு, அவிநாசி சாலையில் உள்ள செந்தில் டவர்ஸ் ஆகிய இரு இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
 இந்தச் சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ரகசிய இடத்தில் விசாரணை... இதனிடையே, நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள கர்சன் எஸ்டேட்டில் வியாழக்கிழமை இரவு 10 மணி வரையிலும் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையிலும் சோதனை தொடர்ந்தது. கொடநாடு எஸ்டேட், கர்சன் எஸ்டேட் ஆகியவற்றின் நிர்வாகங்கள் வெவ்வேறாக இருந்தாலும், இவற்றின் வங்கிக் கணக்குகள் பாங்க் ஆஃப் இந்தியா கிளையிலேயே இருந்ததால், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 வியாழக்கிழமை இரவு விசாரணைக்கு ப் பின்னர் வருமான வரித் துறை அதிகாரிகள் 3 பேர் கோவைக்குத் திரும்பிவிட்ட நிலையில், எஞ்சிய நான்கு பேர் கோத்தகிரி பகுதியில் ரகசிய இடத்தில் தங்கி, நடராஜனிடம் இரவு முழுதும் விசாரணை நடத்தியுள்ளனர்.
 இந்த விசாரணை தொடர்பாக எஸ்டேட் வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்:
 இந்த விசாரணையின்போது கொடநாடு எஸ்டேட்டுக்கு பின்னர் வாங்கப்பட்ட கர்சன் எஸ்டேட்டுக்கான பணம் கொடுக்கப்பட்ட விதம், இதற்கு இடைத்தரகராக செயல்பட்டவர் யார், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் இவ்விரு எஸ்டேட்டுகளில் புதிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டவர்களின் விவரம், மர வியாபாரி சஜீவனுடன் எஸ்டேட் மேலாளர் நடராஜனுக்கு உள்ள தொடர்பு, கொடநாடு எஸ்டேட்டின் தேயிலைத்தூள் ஏற்றுமதி விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் 563 ஏக்கர் பரப்பளவிலான கர்சன் எஸ்டேட்டை விலைக்கு வாங்கும்போது பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் முறையாக இல்லாததாலேயே தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 இதனிடையே, பாங்க் ஆஃப் இந்தியாவின் ஈளாடா கிளைக்கும், கொடநாடு நிர்வாகத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், பல்வேறு பணப் பரிமாற்றங்கள் இந்த வங்கியிலேயே நடராஜன் மூலம் நடைபெற்றிருப்பதால் அதுகுறித்தும் விசாரணை தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கிய விசாரணை இரவு 8 மணிக்குப் பின்னரும் தொடர்ந்தது.
 35 மணி நேரம் சோதனை... இதனிடையே, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கொத்தமங்கலத்தில் செயல்பட்டு வரும், தினகரனின் ஆதரவாளரான மணல் வியாபாரி ஓ.ஆறுமுகசாமிக்குச் சொந்தமான காகித ஆலையில், 6 பேர் கொண்ட வருமானவரித் துறையினர் வியாழக்கிழமை காலை சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.
 அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனையிலும் அங்கு ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால், 35 மணி நேரத்துக்குப் பிறகு வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை மாலை ஆலையில் இருந்து வெளியேறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com