மன்னார்குடியில் வருமான வரித் துறையினரின் வாகனத்தை வழிமறித்து தகராறு: 20 பேர் கைது

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்குச் சொந்தமான மகளிர் கல்லூரியில் சோதனையிடச் சென்ற வருமான வரித் துறையினரின்
மன்னார்குடியில் வருமான வரித் துறையினரின் வாகனத்தை வழிமறித்து தகராறு: 20 பேர் கைது

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்குச் சொந்தமான மகளிர் கல்லூரியில் சோதனையிடச் சென்ற வருமான வரித் துறையினரின் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, தகராறு செய்தது தொடர்பாக திவாகரனின் ஆதரவாளர்கள் 20 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 திவாகரனின் மன்னார்குடி, சுந்தரக்கோட்டை வீடுகள், மகளிர் கல்லூரி, உதவியாளர் விநாயகம் வீடு, டிடிவி. தினகரனால் நியமிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டச் செயலர் எஸ். காமராஜ் வீடு உள்பட 5 இடங்களில், வருமான வரி சோதனை வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது.
 வாகனங்கள் சோதனை: சோதனைக்காக வந்துள்ள வருமான வரித் துறையினர் பயன்படுத்தும் 10 }க்கும் மேற்பட்ட கார்கள் அடிக்கடி வெளியே சென்று உள்ளே வருவதாகவும், அப்படி வரும் கார்களில் கனமான பைகள் எடுத்துச் செல்லப்படுவதாக, திவாகரனின் ஆதரவாளர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன், காவல் ஆய்வாளர் பி. மணிவேல் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கல்லூரிக்குள் செல்லும் வருமான வரித் துறையினரின் வாகனங்களை போலீஸôர் சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதித்தனர்.
 20 பேர் கைது: இதனிடையே, வருமான வரித் துறையினரின் கார் ஒன்று கல்லூரிக்குள் செல்ல முயன்றபோது, அதை திவாகரனின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி கார் உள்ளே செல்லக்கூடாது எனவும், அதிகாரிகள் இறங்கி நடந்து செல்லுமாறும் கூறி கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீஸôர் அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக, அதிமுக (அம்மா அணி) நாகை மாவட்டச் செயலர் ஆர். சந்திரமோகன் உள்ளிட்ட 7 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
 இதேபோல், கல்லூரிக்கு எதிரில் உள்ள திவாகரனின் வீடு அருகே நின்றுகொண்டிருந்த மன்னார்குடி நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவா. ராஜமாணிக்கம், நகரச் செயலர் ஆ. ஆனந்தராஜ் உள்பட 13 பேர் என மொத்தம் 20 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
 மன்னார்குடியில் தொடர்ந்த சோதனை... இதனிடையே, அதிமுக (அம்மாஅணி) திருவாரூர் மாவட்டச் செயலர் எஸ். காமராஜ், குடும்பத்துடன் சென்னை சென்றிருந்ததால் வியாழக்கிழமை அந்த வீட்டில் மட்டும் சோதனை நடைபெறவில்லை. இதைத் தவிர்த்து மன்னார்குடியில் உள்ள டிடி வி தினகரன் மற்றும் திவாகரனின் வீடுகள் உள்ளிட்ட 13 இடங்களிலும் இரவு 10 மணி வரை சோதனை நடைபெற்றது. இதில் திவாகரனின் இரண்டு வீடுகள், கல்லூரி, விநாயகம் வீடு ஆகிய நான்கு இடங்களில் மட்டும் சோதனை நிறைவு பெறவில்லை. மற்ற 9 இடங்களிலும் சோதனையை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு நிறைவு செய்தனர்.
 இந்த நிலையில், எஸ். காமராஜ் வியாழக்கிழமை இரவு ஊருக்கு திரும்பியதையடுத்து, அவரது வீடு, சோதனை நிறைவு பெறாத திவாகரனின் வீடுகள், கல்லூரி, விநாயகம் வீடு என 5 இடங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com