காலில் புண்ணுடன் சுற்றும் யானைக்கு சிகிச்சை

கோவையை அடுத்த ஆனைகட்டி அருகே காலில் புண்ணுடன் சுற்றும் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி மருத்துவர்கள் 3-ஆவது நாளாக திங்கள்கிழமை சிகிச்சை அளித்தனர்.
காலில் புண்ணுடன் சுற்றும் யானைக்கு சிகிச்சை

கோவையை அடுத்த ஆனைகட்டி அருகே காலில் புண்ணுடன் சுற்றும் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி மருத்துவர்கள் 3-ஆவது நாளாக திங்கள்கிழமை சிகிச்சை அளித்தனர்.
 கொண்டனூர்புதூரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை காலில் புண்ணுடன் சில நாள்களாக சுற்றி வருகிறது. கடந்த சனிக்கிழமை யானைக்கு ஊசி மூலமாக மருந்து செலுத்தி சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த யானை சிகிச்சைக்கு இடையே வனப் பகுதிக்குச் சென்றதால் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
 இதையடுத்து, மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில், மாவட்ட வன அலுவலர் சதீஷ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத் துறையினர், வேட்டை தடுப்புக் காவலர்கள் கடந்த இரு நாள்களாக யானையைக் கண்காணித்து வந்தனர். சாடிவயல் முகாமில் இருந்து கும்கியானை பாரி ஞாயிற்றுக்கிழமையும், மற்றொரு கும்கியான சுஜய் திங்கள்கிழமையும் அங்கு வரவழைக்கப்பட்டன.
 மேலும், கோவை கோட்ட வன கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவ அலுவலர் கே.அசோகன், ஆனைகட்டி கால்நடை உதவி மருத்துவர் ஜெயபாரதி ஆகிய 3 மருத்துவர்கள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட உதவியாளர்களும் வரவழைக்கப்பட்டனர்.
 இந்நிலையில் புண்ணுடன் சுற்றி வரும் யானைக்கு திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தப்பட்டது. பின்னர் அரை மயக்கத்தில் இருந்த யானையின் கால் பகுதியில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மேலும், கழுத்துப் பகுதியில் இருந்த புண்ணும் சுத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த யானைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் சத்து மருந்துகள் ஊசி மூலமாக செலுத்தப்பட்டன. காயங்களுக்கு மருந்தும் தடவப்பட்டது.
 இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், காலில் காயமடைந்த யானை தற்போது ஓரளவு குணமடைந்து வனப் பகுதிக்குள் சென்றுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com