வருமான வரித்துறை சோதனையின்போது நடந்தது என்ன? விளக்கம் அளித்தார் விவேக்

தனது வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து ஜெயா டிவியின் செயல் நிர்வாகி விவேக் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
வருமான வரித்துறை சோதனையின்போது நடந்தது என்ன? விளக்கம் அளித்தார் விவேக்


சென்னை: தனது வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து ஜெயா டிவியின் செயல் நிர்வாகி விவேக் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலாவுடன், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளவரசியின் மகன் விவேக். சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வரும் இவர், ஜெயா டிவியை நிர்வகித்து வருகிறார். இவரது வீடு, ஜெயா டிவி அலுவலகம், இவருக்கு சொந்தமான ஜாஸ் சினிமா அலுவலகம் உள்ளிட்டவற்றில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

நேற்று சோதனை முடிவடைந்த நிலையில், வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விவேக் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் விவேக். 

அப்போது அவர் பேசியதாவது, கடந்த 5 நாட்களாக எனது வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  ஜெயா டிவி மற்றும் ஜாஸ் கம்பெனியை சுமார் 2 வருடங்களாக நான் நிர்வகித்து வருகிறேன். இது தொடர்பாக ஆவணங்களைக் கேட்டார்கள்.

வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியிருக்கிறேன். திருமணத்தின் போது என் மனைவிக்குப் போடப்பட்ட நகைகள் குறித்து கணக்குக் கேட்டுள்ளனர். அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளேன்.

அவர்கள் கடமையை அவர்கள் செய்தார்கள். எங்கள் கடமையை நாங்கள் செய்வோம். நாங்கள் பதில் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம். மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள். அப்போது என்ன கேட்கிறார்களோ அதற்கு பதில் சொல்வேன் என்று கூறினார்.

உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து என்னென்ன பறிமுதல் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு, முக்கிய ஆவணங்கள், நான் நிர்வகித்து வரும் நிறுவனங்களின் கணக்கு அறிக்கைகள், மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், மனைவியின் சில நகைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

மேலும், நான் ஒரு சாதாரண குடிமகன். நான் சரியாக கணக்குக் காட்டி வந்துள்ளேன். அது குறித்து கணக்குக் கேட்டனர். கொடுத்துள்ளேன். தவறாக யார் பணம் சம்பாதித்தாலும் வருமான வரி செலுத்தியே ஆக வேண்டும். மேலும் அவர்கள் கேட்ட கணக்கு விவரங்களை அடுத்த 2 அல்லது 3 நாட்களில் வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்வேன் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com