கர்சன் எஸ்டேட்டில் நிறைவடைந்தது 6 நாள் சோதனை: ஆவணங்களுடன் அதிகாரிகள் கிளம்பினர்

கர்சன் எஸ்டேட்டில் வருமான வரித் துறையினர் 6 நாள்களாக நடத்தி வந்த சோதனை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், முக்கியக் கோப்புகளுடன்

கர்சன் எஸ்டேட்டில் வருமான வரித் துறையினர் 6 நாள்களாக நடத்தி வந்த சோதனை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், முக்கியக் கோப்புகளுடன் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனையும் அவர்கள் அழைத்துச் சென்றனர். 
வருமான வரித் துறையினர் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை (நவ. 9) முதல் திடீர் ரெய்டு நடத்தினர். இதில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட், கடந்த சில வருடங்களுக்கு முன் வாங்கப்பட்ட கர்சன் எஸ்டேட், இந்த இரு எஸ்டேட்களின் வங்கிக் கணக்குகள் உள்ள பாங்க் ஆஃப் இந்தியாவின் ஈளாடா கிளை ஆகியவற்றிலும், சசிகலாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் மர வியாபாரி சஜீவனுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
சஜீவனுக்குச் சொந்தமான இடங்களிலும், கொடநாடு எஸ்டேட் , பாங்க் ஆஃப் இந்தியாவின் ஈளாடா கிளை ஆகியவற்றில் வியாழக்கிழமை ஒரே நாளில் ஆய்வு முடித்துக்கொள்ளப்பட்ட நிலையில், கர்சன் எஸ்டேட்டில் மட்டும் தொடர் சோதனையும், ஆவணங்களைச் சரிபார்க்கும் ஆய்வும் நடைபெற்று வந்தது. 
இந்த 6 நாள்களில் கொடநாடு எஸ்டேட் மேலாளரான நடராஜனிடம் சுமார் 90 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கர்சன் எஸ்டேட்டில் பணியாற்றும் ஓட்டுநரிடம் திங்கள்கிழமை நாள் முழுவதும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வருமான வரித் துறையினரின் இந்தச் சோதனை மற்றும் ஆய்வு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கர்சன் எஸ்டேட்டிலிருந்து வருமான வரித் துறை அதிகாரிகள் வெளியேறும்போது, தங்கள் ஆய்வு முடிவடைந்துவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், முக்கியக் கோப்புகளுடன் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனையும் அவர்கள் உடன் அழைத்துச் சென்றனர். 
இதன்மூலம் கொடநாடு, கர்சன் எஸ்டேட் பகுதிகளில் கடந்த 6 நாள்களாக நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை, நடராஜனின் குடும்பத்தினர்அவரை நேரில் பார்த்துப் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கோவையில் விசாரணை: 
கோவை -ரோஸ்கோர்ஸில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு அழைத்துவரப்பட்ட நடராஜனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com