கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை!

கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை!

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்தது தொடர்பான வழக்கில், கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்தது தொடர்பான வழக்கில், கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்கிற பாலா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 14-ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கந்துவட்டி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து குடும்பத்தினர் அக்டோபர் 23 -ஆம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேலிச் சித்திரம் ஒன்றை வரைந்து அக்டோபர் 24 -ஆம் தேதி எனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். 

இந்தக் கேலிச்சித்திரம் தொடர்பாக, அக்டோபர் 31 -ஆம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் என் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 -இன் படி வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நவம்பர் 5 -ஆம் தேதி சென்னைக்கு வந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் என்னை கைது செய்தார். தற்போது நான் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளேன்.

நான் எவ்வித குற்றச்செயலிலும் ஈடுபடாத நிலையில், என் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது தவறு. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. எனவே என் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தனது மனுவில் கார்ட்டூனிஸ்ட் பாலா கோரியிருந்தார்.

இந்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு விசாரணையை மேற்கொள்ள நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com