கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பேன்: ஜெயா தொலைக்காட்சி நிர்வாகி விவேக்

வருமான வரித் துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாக ஜெயா தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பேன்: ஜெயா தொலைக்காட்சி நிர்வாகி விவேக்

வருமான வரித் துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாக ஜெயா தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் தெரிவித்தார்.
ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த வருமான வரித் துறை சோதனை குறித்து அதன் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: வருமான வரித் துறையினர் எனது வீட்டிலும் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்திலும் 5 நாள்கள் சோதனை நடத்தினர். எங்கள் வீட்டில் மட்டுமின்றி, எங்களுக்குத் தொடர்புடைய நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. 
ஜெயா தொலைக்காட்சியையும், ஜாஸ் சினிமா நிறுவனத்தையும் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன். ஜாஸ் சினிமா நிறுவனத்தில் 2017-இல் இருந்து நான் சி.இ.ஓ.வாக இருந்து வருகிறேன்.
நகைகளுக்கு கணக்கு வைத்துள்ளேன்: வருமான வரித்துறையினர், சோதனையின் போது எடுக்கப்பட்ட ஆவணங்கள் பற்றி என்னிடம் கேட்டார்கள். அவை அனைத்துக்கும் நான் விரிவாகப் பதில் கூறியுள்ளேன். எனது மனைவிக்கு திருமணத்தின் போது போடப்பட்ட நகைகள் பற்றி கேள்வி கேட்டனர். அந்த நகைகள் அனைத்துக்கும் நான் கணக்கு வைத்துள்ளேன். கண்டிப்பாக இன்னும் 2, 3 நாள்களில் வருமான வரித்துறையினரிடம் அதை சமர்ப்பித்து விடுவேன்.
கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்: வருமான வரித் துறையினர் அவர்களது கடமையைச் செய்துள்ளனர். எனது பணி அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது. அதை சொல்லி விட்டேன். இதைத் தொடர்ந்து அடுத்த சில நாள்களுக்குப் பிறகு அல்லது சில மாதங்களுக்குப் பிறகு திரும்ப என்னை விசாரணைக்கு அழைக்கும்போது, என்னென்ன கேள்வியை கேட்பார்களோ, அதற்கான பதிலை அளிக்கவும் தயாராக உள்ளேன்.
எங்களது நிறுவனங்கள் சம்பந்தமாக சில பொதுவான ஆவணங்களைப் பார்த்து எடுத்தார்கள். சில கணக்கு வழக்குகளை வைத்து கேள்வி கேட்டனர். சினிமா நிறுவனம், விநியோகஸ்தர்களின் ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்டவை குறித்தும் கேள்வி கேட்டனர். இதற்கு உரிய பதில் தெரிவித்தேன். இதைத் தவிர்த்து எனது மனைவியின் நகைகள் பற்றி கேட்டனர். வேறொன்றும் இல்லை.
மிகைப்படுத்த வேண்டாம்: மிகைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு சில விளக்கங்களை சொல்லவே மரியாதை நிமித்தமாக செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். தவறாக யார் பணம் சம்பாதித்தாலும் அவர்கள் வருமான வரித் துறைக்கு வரி செலுத்த வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் விசாரணையைச் சந்திக்க வேண்டும். இதை தவிர்த்து யூகத்தின் அடிப்படையில் தகவல் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார் விவேக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com