தமிழர்களின் பெருமைகளை ஆவணப்படுத்த காலக் கருவூலத்தை உருவாக்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்

தமிழர்களின் பெருமைகளை ஆவணப்படுத்த ஒரு காலக் கருவூலத்தை மத்திய- மாநில அரசுகள் இணைந்து உருவாக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார்.
தமிழர்களின் பெருமைகளை ஆவணப்படுத்த காலக் கருவூலத்தை உருவாக்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்

தமிழர்களின் பெருமைகளை ஆவணப்படுத்த ஒரு காலக் கருவூலத்தை மத்திய- மாநில அரசுகள் இணைந்து உருவாக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார்.
தினமணி சார்பில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பதினெண் சித்தர்களில் ஒருவரான திருமூலரைப் பற்றி 'கருமூலம் கண்ட திருமூலர்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து ஆற்றிய கட்டுரை:-
ஓர் இனத்தின் பெருமையையும், பெருமிதத்தையும் புதிய தலைமுறை உணர வேண்டும். அது நடந்தால்தான் அந்த இனத்துக்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி வாய்க்கும் எனக் கருதுகிறேன். அண்மையில் நான் எகிப்து நாட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு ராஜ குடும்பத்தினரின் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆயுதங்கள், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாத்து வைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் உயிர்ப் பொருளான தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கியங்களை நாம் சேகரிக்க மறந்துவிட்டோம். 
தமிழ் மூத்த மொழியாக இருந்தாலும் அஸ்ஸாம், மராத்தி, வங்காளம், மலையாளம் ஆகிய 4 மொழிகள் மட்டும்தான் நவீன இலக்கியத்தைப் பேசுவதற்கு தயாரிக்கப்பட்டிருக்கின்றன என வடமாநிலத்தவர்
கூறுகின்றனர். இது யார் தவறு எனத் தெரியவில்லை. ஒற்றுமை இல்லாததும், நமது இலக்கியங்களை நாமே உணராததும்தான் தவறு என நான் கருதுகிறேன். 
தேவை காலக் கருவூலம்: நமது பெருமைகளையெல்லாம் ஆவணப்படுத்த ஒரு காலக் கருவூலம் தேவை. நாகரிகம், கலை, வாழ்வியல், நிலவியல், இலக்கியங்கள், தத்துவங்கள், ஆளுமைகள் என எல்லாவற்றையும் ஒரே கூரையின் கீழ் தொகுத்து அதைக் கால கருவூலமாகச் செய்ய வேண்டும். இதை மத்திய- மாநிலஅரசுகள் இணைந்து உருவாக்க வேண்டும். ஆனால் அதை தமிழகம்தான் பராமரிக்க வேண்டும். 
ஆழ்வார்கள், நாயன்மார்களால்தான்...: பக்தி இருந்தாலும் அது தமிழ்தான். பக்தி, மதம் இந்த இரண்டும் யார் மீதும் திணிக்கப்படாதவரைக்கும் அந்தத் தமிழை ஏற்றுக் கொள்ள எனக்கு எந்தத் தடையும் இல்லை என்பதுதான் எனது எண்ணம். ஆழ்வார்களும், நாயன்மார்களும் 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் தமிழைக் கடத்தியதால்தான் இந்த நவீன உலகத்துக்கு தமிழ் வந்து சேர்ந்துள்ளது.
வேதமும் ஆகமும்...: திருமந்திரம் வேதப்பொருள் அல்ல. அது ஆகமப்பொருள். ஓதப்படுவது வேதம்; ஒழுங்கு செய்வது ஆகமம். சமய மறுப்பாளரும் இதை சமய நூல் எனக் கருத இயலாது. இதை தமிழர் தத்துவத்தின் முழு முதல் காட்டும் முதுநூல் எனச் சொல்லுவதே சரியாக இருக்கும். கடவுள் என்பது உள்ளூர் சரக்கல்ல; உலகச்சரக்கு. கடவுளைக் கடக்க வேண்டுமானால் முதலில் கடவுளைச் சந்திக்க வேண்டும் என்கிறார் திருமூலர். 
உடலறிவு மற்றும் மூச்சறிவியல் பற்றி முதன் முதலில் திருமந்திரத்தில்தான் பேசப்பட்டது . நீரும் நெருப்பும் இல்லாமலும் இந்த உடல் சில நாள்கள் வாழும். ஆனால் காற்று இல்லாமல் வாழ்வது சிரமம். அந்தக் காற்றுக்கும் உடலுக்குமான தொடர்பை தமிழ்க் குலத்துக்கு முதலில் சொன்னவர். உயிரின் இயக்கம் காற்று; சொல்லப்போனால் உயிரே காற்றுதான். அந்தக் காற்றை இழுத்தல்- இருத்தல்- வெளியிடுதல் மூன்றுக்கும் ஒரு கணக்கிருக்கிறது என்றும் கண்டறிந்தவர் திருமூலர். நிலையாமையும் மரணமும் மனிதனை அறத்துக்கே ஆற்றுப்படுத்த வேண்டும் என்கிறார் திருமூலர். அறிவியல்
வழிப்பட்ட திருமூலரின் சொல் கேட்க வேண்டும் என்றார் கவிஞர் வைரமுத்து. 
பங்கேற்றோர்: இந்த நிகழ்ச்சியில் தமிழ் இசைச் சங்க அறங்காவலர்கள் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா, தமிழ் இசைச் சங்கத்தின் தலைவர் நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன், நீதிபதி பாட்சா, நடிகர் சிவக்குமார், எழுத்தாளர்கள் பாலகுமாரன், சிவசங்கரி, மரபின் மைந்தன் முத்தையா, மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்), நவநீத கிருஷ்ணன் (அதிமுக), கனிமொழி (திமுக), தினமணி முன்னாள் ஆசிரியர் மாலன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் அருள், முன்னாள் தலைவர்
அரங்க ராமலிங்கம், சீர்காழி சிவ சிதம்பரம், தொழிலதிபர் எச்.வசந்த்குமார், இயக்குநர் வசந்த், நடிகர் பாண்டியராஜன், பேராசிரியர் தி.ராசகோபாலன், சொற்பொழிவாளர் சாரதா நம்பி ஆரூரன், பாடலாசிரியர்
மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, வெற்றித் தமிழர் பேரவையைச் சேர்ந்த வி.பி.குமார், கவிஞர்கள் முத்துலிங்கம், இளைய பாரதி, காசி முத்து மாணிக்கம், முத்தமிழ் மன்றச் செயலர் வழுவூர் ரவி, தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலர் ப.லட்சுமணன், பேராசிரியர்கள் மு.பி.பாலசுப்பிரமணியன், இராம குருநாதன், பாஜக ஊடகப் பிரிவின் தலைவர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com