ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசின் என்டிஆர் விருதுகள் அறிவிப்பு

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசின் கௌரவம் மிக்க என்டிஆர் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசின் என்டிஆர் விருதுகள் அறிவிப்பு

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசின் கௌரவம் மிக்க என்டிஆர் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆந்திர முன்னாள் முதல்வரான என்.டி.ராமா ராவின் பெயரில் என்டிஆர் தேசிய விருதுகளை ஆந்திர அரசு நிறுவியுள்ளது. இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்த விருதானது ரூ.5 லட்சம் ரொக்கமும், ஒரு நினைவுப் பரிசும் கொண்டதாகும்.
இந்நிலையில், கடந்த 2014, 2015, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு இவ்விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்ய ராமா ராவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா தலைமையில் குழு ஒன்றை ஆந்திர அரசு அமைத்திருந்தது. இந்தக் குழுவானது, தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு முறையே 2016 மற்றும் 2014-ஆம் ஆண்டுக்கான என்டிஆர் தேசிய திரைப்பட விருதுகளை அளிக்கப் பரிந்துரைத்தது. 
மேலும், மூத்த தெலுங்கு திரைப்பட இயக்குநர் கே.ராகவேந்திர ராவுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டுக்கான என்டிஆர் தேசிய விருது, பாகுபலி திரைப்பட இயக்குநர் ராஜமௌலி, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், போயபாடி ஸ்ரீநிவாஸ் ஆகியோருக்கு முறையே 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளுக்கான பி.என்.ரெட்டி தேசிய திரைப்பட விருது, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, கிருஷ்ணம்ராஜு ஆகியோருக்கு ரகுபதி வெங்கய்யா விருது ஆகியவற்றை வழங்கவும் இக்குழு பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரைகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை மாலை ஒப்புதல் அளித்ததாக ஆந்திர அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த விருதுகளை வழங்கும் விழா விஜயவாடாவில் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, சிறந்த திரைப்படங்களுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகளும் வழங்கப்படும்.
என்டிஆர் தேசிய திரைப்பட விருதை ராமா ராவின் சம காலத்தவரும், மறைந்த முதுபெரும் நடிகருமான நாகேஸ்வரராவ், கன்னட நடிகர் ராஜ்குமார், பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், அமிதாப் பச்சன், பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோர் ஏற்கெனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com