நகைச் சீட்டுகள் மூலம் ரூ.75 கோடி அளவுக்கு மோசடி: பிரபல நகைக் கடை ஒப்புதல்

நகைச் சீட்டுகள் மூலம் சுமார் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து பணத்தைப் பெற்று ரூ.75 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதை பிரபல நகைக் கடை உரிமையாளர்கள் ஒப்புக் கெண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நகைச் சீட்டுகள் மூலம் ரூ.75 கோடி அளவுக்கு மோசடி: பிரபல நகைக் கடை ஒப்புதல்


சென்னை: நகைச் சீட்டுகள் மூலம் சுமார் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து பணத்தைப் பெற்று ரூ.75 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதை பிரபல நகைக் கடை உரிமையாளர்கள் ஒப்புக் கெண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை, ஓசூர் உள்ளிட்ட 7 இடங்களில் இயங்கி வந்த பிரபல தனியார் நகைக் கடையில், நகைச் சீட்டுக் கட்டியவர்கள், பணம் அல்லது நகையைக் கொடுக்காமல் ஏமாற்றுவதாக காவல்நிலையித்தில் புகார் அளித்தனர். ஏராளமான புகார்கள் வந்த நிலையில், திடீரென கடந்த மாதம் நகைக் கடைகள் மூடப்பட்டன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதலீட்டாளர்களின் முதலீடுகளை பாதுகாக்கும் சட்டம்-1997ன் கீழ், 406, 420 உள்ளிட்ட பிரிவுகளில், நகைக் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கை விசாரித்தனர்.

இதன் அடிப்படையில், நகைக்கடை இயக்குநர்கள் ரங்கநாத குப்தா, அவரது மகன்கள் பிரபன்ன குமார், பிரசன்ன குமார் மற்றும் உறவினர் கோடா சுரேஷ் ஆகியோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் சென்னையின் முக்கிய இடங்களில் இருக்கும் நகைக் கடைகள், அம்பத்தூரில் பள்ளிக் கட்டடம், கீழ்பாக்கத்தில் இரண்டு வீடுகள் என பல சொத்துக்களை வாங்கியிருந்தது தெரிய வந்தது.

இந்த சொத்துக்களை நீதிமன்றம் மூலம் விற்பனை செய்து, அதில் வரும் பணத்தைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திரும்ப செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நகைக் கடை உரிமையாளர்களின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக கடந்த 2016 மற்றும் 2017ல், இவர்களது பொருளாதார நிலை மிக மோசமடைந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், சுமார் 21 ஆயிரம் பேரிடம் சீட்டு திட்டத்தின் கீழ் பணம் பெற்று ரூ.75 கோடி அளவுக்கு ஏமாற்றியிருப்பதை உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், தங்களது சொத்துக்களை விற்று அதனை திருப்பித் தரவும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் 16ம் தேதி தமிழகத்தில் இயங்கி வந்த 7 நகைக் கடைகளும் மூடப்பட்டதை அடுத்து,  தங்களது நிதிநிலை துரதிருஷ்டவசமாக மோசமான நிலையை அடைந்திருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பித் தர அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும் தனியார் நகைக் கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக நகைக் கடை வாயில்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சுமார் 77 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட இந்த நகைக் கடை, எதிர்பாராதவிதமாக நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டதாகவும், வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 5 மற்றும் வேலூர், ஓசூரில் உள்ள தலா 1 கடைகளை விரைவில் திறக்க திட்டமிட்டிருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com