புதிய தொழில்களைத் தொடங்க தமிழகம் சிறந்த மாநிலம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

புதிய தொழில்கள் தொடங்க தமிழகம் சிறந்த மாநிலமாக உருவெடுத்திருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
புதிய தொழில்களைத் தொடங்க தமிழகம் சிறந்த மாநிலம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

புதிய தொழில்கள் தொடங்க தமிழகம் சிறந்த மாநிலமாக உருவெடுத்திருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
 சென்னையில் ஐக்கிய பொருளாதாரப் பேரவை (யு.இ.எப்.) உச்சி மாநாட்டின் 2-ஆவது நாளில் பங்கேற்ற துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியது:
 இந்தியாவில் வேகமாக முன்னேறி வரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. மக்கள் தொகையில் 7-ஆவது பெரிய மாநிலமாக இருக்கும் தமிழகம், பொருளாதார நிலையில் இரண்டாவது பெரிய மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
 விரிவடைந்த தொழில்துறை அடித்தளத்தை தமிழகம் கொண்டுள்ளது. ஜவுளி, தோல், ஆட்டோமொபைல், கனரக இலகுரக இன்ஜினீயரிங் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, சுகாதாரப் பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.
 இதுபோன்ற காரணங்களால் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் இந்திய அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. வேலை வாய்ப்பு அதிகரிப்பு: தமிழகத்தில் 2014 -ஆம் ஆண்டில் புதிய தொழில்துறை கொள்கை செயல்படுத்தப்பட்டது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி உள்பட சூழலுக்கு ஏற்ப வரும் அம்சங்களையும் கருத்தில் கொண்டு கொள்கையைச் சீரமைத்து செயல்படுத்தி வருகிறோம்.
 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2014-15-ஆம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 104 புதிய தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இது 2016-17 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 310-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
 தொடர்ந்து மாநிலத்தில் முதலீட்டு சூழ்நிலையை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம்- 2' தொடங்கப்பட்டுள்ளது.
 இந்த யு.இ.எஃப். வர்த்தக மாநாட்டில் ரூ. 71, 750 கோடி அளவிலான முதலீடுகளைச் செய்ய, முதலீட்டு கமிட்டி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ரூ.2,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ளன. எனவே, இம்மாநாட்டின் மூலம் தமிழகத்தில் முதலீடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
 விழாவில், யு.இ.எஃப். பேரவை தலைவர் அகமது ஏ.ஆர். புகாரி மற்றும் தொழிலதிபர்கள், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்று பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com