போயஸ் தோட்ட சோதனையில் எடுத்துச் சென்ற மடிக்கணினியில் எந்த ரகசியத் தகவலும் இல்லை

போயஸ் தோட்டச் சோதனையில் வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்ற மடிக்கணினி, பென் டிரைவ்களில் எந்தவொரு ரகசியத் தகவலும் இல்லை என்றார் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன்.
போயஸ் தோட்ட சோதனையில் எடுத்துச் சென்ற மடிக்கணினியில் எந்த ரகசியத் தகவலும் இல்லை

போயஸ் தோட்டச் சோதனையில் வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்ற மடிக்கணினி, பென் டிரைவ்களில் எந்தவொரு ரகசியத் தகவலும் இல்லை என்றார் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன்.
 பேராவூரணி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வீரகபிலனின் (60) இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: போயஸ் தோட்டச் சோதனை மக்களின் மனதிலிருந்து அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற முயற்சியின் உச்சகட்ட நடவடிக்கை. இது மக்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தெரியும்.
 தற்போது எடப்பாடி கே. பழனிசாமி, தினகரன் எப்போது அரசியலுக்கு வந்தார் என்று கேட்டு, பிதற்றுகிறார். எம்ஜிஆர் இருந்தபோதுகூட, ஜெயலலிதாவை மெய்க்காப்பாளனாக ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து பாதுகாத்தவன் நான். அதன் பிறகு, ஜெயலலிதாவின் முடிவின்படியே, 1999 -ஆம் ஆண்டு தேர்தலில் நின்று எம்பி ஆனேன். தொடர்ந்து ஜெயலலிதாவால் பேரவைச் செயலராக்கப்பட்டேன். அப்போது எடப்பாடி பழனிசாமி எந்தப் பொறுப்பில் இருந்தார் என்றே தெரியவில்லை.
 அனைத்துத் தரப்பினரும் சேர்ந்துதான் சசிகலாவைப் பொதுச்செயலராக்கினர். அவர் சிறைக்குச் சென்ற பிறகு, இவர்கள் அனைவரும் சேர்ந்துதான் என்னைத் துணைப் பொதுச்செயலராக்கி, கட்சியை இவர்தான் வழிநடத்துவார் எனக் கூறினர்.
 தொடர்ந்து ஆட்சிமன்றக் குழு கூடி முடிவெடுத்த பிறகே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். அப்போது முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியே தொப்பியைப் போட்டுக்கொண்டு ஓட்டுக் கேட்டார்.
 ஆனால் தற்போது இவர் தலைமையிலான நிர்வாகிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்துடன் செயல்படுகின்றனர்.
 இதற்கு உதாரணம்தான் போயஸ்கார்டனில் சோதனை நடந்தபோது வாய் திறக்காமல் இருந்தது. இது கட்சித் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதன் விளைவாகத்தான், தற்போது புதுப்புது காரணங்களைக் கூறி வருகின்றனர். இவர்களில் எம்பி மைத்ரேயன் மட்டும் மனசாட்சியுடன் பேசியுள்ளார்.
 ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக்கப்படும் என அறிவித்தவர்கள், அங்கு சோதனை நடந்தபோது ஒரு சிறு எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்கவில்லை. அப்போது அமைதியாக இருந்துவிட்டு, 2 நாள்கள் எங்கோ சென்று ஒளிந்துகொண்டு, தற்போது பிதற்றுகின்றனர்.
 சசிகலாவை ஜெயலலிதா பாதுகாக்கவில்லை என திவாகரன் கூறியிருப்பது, சகோதரி சிறையில் இருக்கும் ஆதங்கத்திலும், வருத்தத்திலும் தெரிவித்த கருத்தே. இதைத் தவறாக நினைக்க வேண்டாம், அரசியலாக்க வேண்டாம். ஈவிகேஎஸ். இளங்கோவன் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, வேறு கட்சிக்கு செல்வதற்கான முன்னோட்டம் பார்த்து வருவதாக நினைக்கிறேன் என்றார்.
 முன்னாள் எம்எல்ஏக்கள் தஞ்சாவூர் ரங்கசாமி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com