எங்களுக்குப் பின்னாலும், முன்னாலும் யாருமில்லை: தேர்தல் ஆணைய தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

எங்களுக்கு (அதிமுகவினர்) பின்னாலும், முன்னாலும் யாருமில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் கிடைத்ததைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வியாழக்கிழமை மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்.
இரட்டை இலை சின்னம் கிடைத்ததைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வியாழக்கிழமை மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்.

எங்களுக்கு (அதிமுகவினர்) பின்னாலும், முன்னாலும் யாருமில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்தனர். இரட்டை இலை சின்னம் கிடைத்த மகிழ்ச்சியை அவர்கள் இனிப்புகளை வழங்கி பரிமாறிக் கொண்டனர்.
செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: 1972-ஆம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர்., தொடங்கினார். இந்த கட்சி தொண்டர்களின் இயக்கமாக செயல்படும் எனவும் இதன் மூலம் மக்களின் அங்கீகாரம் பெற்று அமைக்கப்படும் ஆட்சி, மக்களின் ஆட்சியாக இருக்கும் என்று நாட்டு மக்களுக்கு பிரகடனப்படுத்தினார் எம்.ஜி.ஆர். அவரது மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 27 ஆண்டுகள் இந்த இயக்கத்தை தொண்டர்களின் இயக்கமாக, எம்.ஜி.ஆர்., நடந்து வந்த பாதையில் மக்கள் இயக்கமாக நடத்தி வந்தார். ஜெயலலிதா 17 ஆண்டுகள் தமிழக மக்களின் தீர்ப்பினைப் பெற்று, நாடு போற்றும் நல்ல முதல்வராக சிறப்பான ஆட்சியை நடத்தினார்.
வெற்றி-மகிழ்ச்சி: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனும் இருபெரும் தலைவர்களின் எண்ணப்படியேதான் கட்சியும், ஆட்சியும் இருக்க வேண்டும் என்பதே ஒன்றரை கோடித் தொண்டர்களின் கருத்து. ஆனால், கட்சியில் சோதனைகள் ஏற்பட்டு, அது இந்திய தேர்தல் ஆணையத்துக்குச் சென்று இப்போது அதிமுக நம் பக்கம்தான் இருக்கும் என தீர்ப்பு தந்து இருக்கிறார்கள். இந்த வெற்றி, மகிழ்ச்சியை, ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் ஏழரை கோடி தமிழ் மக்களின் சார்பாக கட்சியை தோற்றுவித்து வளர்த்த இருபெரும் தலைவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
தலைமைக் கழக நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்படுவார்களா?
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது கழகத்தின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களே தொடர்ந்து நீடிப்பார்கள் என கட்சியின் பொதுக்குழுவில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜக இந்தத் தீர்ப்புக்கு பின்னால் இருப்பதாகக் கூறப்படுகிறதே?
அறுதிப் பெரும்பான்மைமிக்க பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.-க்கள் ஆகியோரைக் கொண்டு கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில், கட்சியின் சட்ட விதிகளுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்குங்கள் என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டோம். எனவே, எங்களுக்கு பின்னாலும் யாரும் இல்லை. முன்னாலும் யாரும் இல்லை என்றார்.
எடப்பாடி கே.பழனிசாமி: தர்மத்தை, நீதியை தேர்தல் ஆணையம் நிலைநாட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். இருபெரும் தலைவர்கள் 27 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தி எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளார்கள்.
அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். இரு பெரும் தலைவர்கள் தொண்டர்களையும் காத்து வந்தார்கள். அதனை நாங்களும் மேற்கொள்வோம். சிலர் இந்த இயக்கத்தை உடைத்து விடலாம். ஆட்சியை கவிழ்த்து விடலாம் என நினைத்தார்கள். அதற்கு சம்மட்டி அடி போன்று இந்தத் தீர்ப்பு வெளிவந்துள்ளது.
அனைத்து நிர்வாகிகளும், பொது மக்களும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்தோருக்கு ஆண்டவன் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளார். தர்மம், நீதிதான் வெல்லும் என்பது தேர்தல் ஆணையத்தின் இந்தத் தீர்ப்பு மூலம் உண்மையாகியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com