கிராமப்புற மக்களுக்கு சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

கிராமப்புற மக்களுக்கு சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று மக்கள்
கிராமப்புற மக்களுக்கு சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

கிராமப்புற மக்களுக்கு சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர் கேட்டுக் கொண்டார்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனை சார்பில், உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி வியாழக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், முதலாம் வகை சர்க்கரை நோய் உள்ள நோயாளிகளுக்கு நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
ஒவ்வொரு ஆண்டும் உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் நவம்பர் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டில் நவம்பர் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இதன் கருப்பொருளாக 'மகளிரும் சர்க்கரை நோயும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு கவனம் தேவை: 10 பெண்களில் ஒருவருக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. அதேபோல், 7 கர்ப்பிணி பெண்களில் ஒருவருக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுத்தால், அடுத்த தலைமுறைக்கு நீரிழிவு நோய் வராமல் காக்க முடியும். 
வாழ்க்கைமுறை, பழக்க வழக்கம், உணவுமுறை ஆகியவற்றை சரியாக பின்பற்றுவது மூலமாக 70 சதவீதம் வரை சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும்.
அனைத்து பெண்களுக்கும் மகப்பேறு காலத்தில் சர்க்கரை நோய் ஆரம்பகட்டநிலையில் கண்டறிந்து, குணப்படுத்தப்படுகிறது. வாழ்க்கை முறை, உணவு, உடல்பயிற்சி ஆகியவற்றை கற்றுக்கொடுத்து நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இந்த முறை இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில்தான் செய்யப்பட்டுள்ளது. 
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக புதிய கட்டடம் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த கட்டடம் திறக்கப்படும்.
கிராமங்களின் விழிப்புணர்வு: கிராமப்புறங்களில் மக்களுக்கு சர்க்கரை நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை அளிக்கவும், சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கவும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இதன்மூலம் கிராமப்புற மக்களை சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து காக்க முடியும் என்றார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
விழிப்புணர்வு ஊர்வலம்: நிகழ்ச்சியில், முதலாம் நிலை சர்க்கரை நோயாளிகள் வீட்டிலேயே சர்க்கரை அளவு கண்டறிந்து கொள்ளும், குளுக்கோ மீட்டர்கள் வழங்கப்பட்டன.
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனை முதல்வர் டாக்டர் எஸ்.பொன்னம்பல நமச்சிவாயம், சர்க்கரை நோய் உயர்நிலை துறை இயக்குநர் டாக்டர் சாந்தாராம், ஆர்.எம்.ஒ. எம்.ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக, சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், அமைச்சர், முதன்மை செயலர், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சர்க்கரை நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டி.சாந்தாராம், மருத்துவமனை முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com